நரிக்குறவர்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநர்!

Published On:

| By Balaji

கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் குளச்சல் பேருந்து நிலையத்தில் மீன் விற்றுவிட்டு தன் வீட்டுக்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறிய மீனவ மூதாட்டி செல்வமேரியை , தூர்நாற்றம் வீசுகிறது என்று கூறி நடத்துநர் கீழே இறக்கிவிட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பலரும் அதுகுறித்து கேள்வி எழுப்பினர். பேருந்து நடத்துநரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த முதல்வர், எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர், நடத்துநர், புகார் மீது நடவடிக்கை எடுக்காத நேரக் காப்பாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள்ளேயே நாகர்கோவிலில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

வள்ளியூரில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நாகர்கோவில் பேருந்து நிலையத்தை சுற்றியும் பேருந்து நிலையத்திலும் ஊசி, பாசி விற்பனை செய்து வருகிறார்கள். விற்பனையை முடித்துவிட்டு தினமும் மாலையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வள்ளியூர் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த வயதான கண் குறைபாடு உடைய ஆண், பெண் மற்றும் குழந்தை ஆகிய மூவரும் ஏறியுள்ளனர். இவர்கள் பேருந்திற்குள் சத்தமாக சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்து நடத்துநர் அவர்களின் உடைமைகளை வெளியே எடுத்து வீசிவிட்டு மூவரையும் இறங்கு இறங்கு என்று கோபமாகக் கூறி இறக்கிவிட்டு சென்றுள்ளார். பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அந்த குழந்தை அழுதுகொண்டே தன்னுடைய உடைமைகளை எடுத்து வைத்து கொள்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

இதற்கிடையே அரசுப் போக்குவரத்து நாகர்கோவில் மண்டலப் பொது மேலாளர், நரிக்குறவர்களைப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட புகாரில் அந்தப் பேருந்தின் ஓட்டுநர் நெல்சன், நடத்துநர் ஜெயதாஸ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பேருந்தில் இருந்து இறக்கவிடப்பட்ட குறவர் குடும்பம். சிலநாட்களுக்கு முன்பு மீன் விற்கும் அம்மாவை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் மறைவதற்குள் மீண்டும் அத்துமீறும் பேருந்து நடத்துனர்,ஓட்டுநர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? pic.twitter.com/qPssmKur9K

— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) December 9, 2021

இச்சம்பவம் குறித்து திமுக எம்.பி கனிமொழி ட்விட்டரில், “சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும்போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூகநீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கோயில்களில் குறவர் இனத்தவர்களுக்கு அன்னதானம் மறுக்கப்படுவதாகவும், எங்களைப் பார்த்தால் பேருந்தை நிறுத்துவதில்லை என்றும் மகாபலிபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து அவருக்கும், அவரது சமூகம் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் முதல்வரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share