[ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் விடுதலை!

Published On:

| By Balaji

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்தும் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எழும் எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் 400 பேர் பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தடைச் சட்டங்களின் கீழ் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுக் கடந்த 57 நாட்களாகத் தகவல் தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

இந்த நிலையில் காஷ்மீர் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் இரண்டாவது அடுக்கான வட்டார வளர்ச்சி கவுன்சில்களுக்கான தேர்தல் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு சில அரசியல் கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது.

இது தொடர்பாக அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகையில், காஷ்மீரில் தற்போது வரை அமைதியான சூழல் நிலவுவதாலும், காஷ்மீர் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளதாலும் தலைவர்களை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தேவேந்தர் சிங் ராணா என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், “ஆம், எனது நடமாட்டம் எந்தவிதத்திலும் கண்காணிக்கப்படாது என நேற்று மாலை ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம் தகவல் தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்டவர்களில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தேவேந்தர் சிங் ராணா, ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர் கட்சியின் ஹர்ஷ் தேவ் சிங், இந்திய தேசிய காங்கிரசின் ராமன் பல்லா, சவுத்ரி லால் சிங், விகார் ரசூல், ஜாவேத் ராணா, சுர்ஜித் சிங், சஜாத் அகமது உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். எனினும் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் வீட்டுக் காவல் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share