மருத்துவர் உடலை அடக்கம் செய்ய மறுப்புத் தெரிவித்த விவகாரம் தொடர்பாகத் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சைமன் ஹெர்குலஸ் கொரோனாவால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர், பிரபலங்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்த வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தை ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு நேற்று (ஏப்ரல் 20) விசாரித்தது.
வைரஸ் தொற்றால், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கையாள்வது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில விதிமுறைகளை அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கண்ணியமான நல்லடக்கம் என்ற உரிமை, புனிதமான மருத்துவத் தொழில் செய்தவரின் உடலுக்கு வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டனர்.
மேலும், குடிமக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்திய நீதிபதிகள் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், சென்னை காவல் ஆணையர் ஆகியோர் வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.
**-கவிபிரியா**�,