�இடைத் தேர்தல்: திமுக பொறுப்புக் குழுவில் ஜெகத்ரட்சகன் இடம்பெற்ற பின்னணி!

Published On:

| By Balaji

விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக தேர்தல் பணிக்குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முரசொலியில் இன்று (செப்டம்பர் 25) வெளியான அறிவிப்பில், “தேர்தல் பணி பொறுப்புக் குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் பொன்முடியும், செயலாளராக அரக்கோணம் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகனும், குழு உறுப்பினர்களாக செஞ்சி மஸ்தான், அங்கையற்கண்ணி, டி.எம்.செல்வகணபதி, ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்திற்கு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும், காணை வடக்கு ஒன்றியத்துக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், காணை தெற்கு ஒன்றியத்துக்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனும், கோலியனூர் மேற்கு ஒன்றியம் மற்றும் விக்கிரவாண்டி பேரூருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களும் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக நாம் இன்று காலை 7 மணிப் பதிப்பில் [விக்கிரவாண்டி லேண்டர்ஸ்: திமுகவின் ஐவர் அணி வியூகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/09/25/16/vikravandi-byelection-dmk-fiveman) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். நாம் குறிப்பிட்டது போலவே பொறுப்பாளர்களாக ஐவரணி நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், குழுவின் செயலாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இடைத் தேர்தலில் ஜெகத்ரட்சகன் மகன் சுந்தீப் ஆனந்தை போட்டியிட தலைமை கேட்டபோது, வேண்டாம் என்று [மறுத்துவிட்டார் ஜெகத்ரட்சகன்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/09/22/94). இந்த நிலையில்தான் தற்போது அவரை தேர்தல் பணிக்குழுவின் செயலாளராக நியமித்துள்ளது திமுக தலைமை. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விக்கிரவாண்டி தொகுதியில் தனித்து நின்ற பாமக சுமார் 40,000 வாக்குகளை பெற்றது. தற்போது அதிமுக கூட்டணியில் பாமக உள்ளதால் அதனை சமாளிக்கும் பொருட்டே ஜெகத்ரட்சகனுக்கு செயலாளர் பதவியை வழங்கப்பட்டிருக்கிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share