கொரோனாவுக்கு மத்தியில் வெள்ளத்தில் மிதக்கும் டெல்லி!

Published On:

| By Balaji

கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தலைநகர் டெல்லியில், தற்போது பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளும் வெள்ளக் காடாகக் காட்சி அளிக்கின்றன.

வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை முதல் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆதம்பூர், ஹிசார், ஹன்சி, ஜிந்த், கோஹானா, கானூர், சோனிபட், பாக்பத், குருகிராம், நொய்டா, காஜியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் இரவில் பெய்த மழையின் காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக மிண்டோ பாலத்தின் அடியில் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் சென்ற ட்ரக் டிரைவர் ஒருவர் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டுள்ளார். இதுகுறித்து ட்ரக் டிரைவர் கூறுகையில், “இந்த உடல் பாலத்தின் கீழே ஒரு பேருந்தின் முன்புறம் மிதந்து கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன் கீழே இறங்கி நீந்தி சென்று மீட்டெடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று டெல்லியின் ஜாகிர்புரி பகுதியில் 55 வயதான மற்றொரு நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

மிண்டோ பாலத்தின் கீழ் பேருந்து ஒன்று இன்று காலை வெள்ள நீரில் மூழ்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் பேருந்தில் பயணித்தவர்களை மீட்டுள்ளனர்.

Happy to inform you all that it rained in Delhi last night. Here’s the proof. The famous #MintoBridge. Yesterday once more ???? pic.twitter.com/6YGzwGBW9E

— Anuj Dhar (@anujdhar) July 19, 2020

மிண்டோ பாலத்தின் கீழ் தேங்கியுள்ள நீர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தேங்கியிருக்கும் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

ஐடிஓ மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் உள்ள குடியிருப்பு ஓரமாக உள்ள கால்வாயில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீட்டின் வளாக பகுதிகளில் யாரும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் இன்று காலை 5.30 மணி வரை, 4.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

**-கவிபிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share