இந்தியாவில் 15 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா: எய்ம்ஸ்!

Published On:

| By Balaji

இந்தியாவில் ஏற்கனவே 6 பேருக்கு கொரோனா இருப்பதாக மத்திய அரசு உறுதி செய்த நிலையில், இந்தியா வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் தாக்கத்தால் உயிரிழப்பு 3200ஆக அதிகரித்துள்ளது, இதனால் உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா குறித்து பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”கொரோனாவைக் கண்டு யாரும் பீதியடைய வேண்டாம். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இத்தாலியிலிருந்து இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகள் 15 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு ரிசல்ட் பாஸிட்டிவாக இருந்ததாக டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது டெல்லி சாவ்லாவில் உள்ள ஐடிபிபி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே இத்தாலி சென்று வந்த டெல்லியைச் சேர்ந்த நபர் ஏற்பாடு செய்த விருந்தில் தங்கள் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டதால் நொய்டாவைச் சேர்ந்த 2 பள்ளிகள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது,

முன்னதாக இத்தாலியிலிருந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. பெங்களூருவில் இண்டெல் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

துபாயிலிருந்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கியிருப்பதாக தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

சீனா, துபாய், அமெரிக்கா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகளவில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது இதன் அறிகுறி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share