தேவையில்லாத பயணங்களை மக்கள் இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தவிர்க்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவனை இயக்குனர் ரன்தீப் குலேரியா நேற்று(மார்ச் 20) பேசுகையில், ”கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. தடுப்பூசி போட்டவர்களுக்கு இதுவரை எந்த பக்கவிளைவுகளும் கண்டறியப்படவில்லை. இந்த தடுப்பூசி 8 மாதம் முதல் 10 மாதங்கள் வரை கொரோனா தொற்றுக்கு எதிரான சக்தியை உடலுக்கு தரும்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாததே கொரோனா பரவலுக்கான காரணங்களில் முக்கியமான ஒன்று. தேவையில்லாத பயணங்களை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இன்னும் கொரோனா கட்டுக்குள் வராத காரணத்தால் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என கூறினார்.
**கட்டாய தடுப்பூசி**
மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அம்மாநகராட்சி அறிவித்துள்ளது
மும்பையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி புதிய பரிசோதனை திட்டத்தை வகுத்துள்ளது.
அதன்படி, மக்கள் கூடும் பொது இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட்டுகள், சுற்றுலா தலங்கள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் பொது மக்களுக்கு இலவசமாக கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும். மால்களில் மட்டும் கட்டணம் வசூலித்து கட்டாய பரிசோதனை செய்யப்படும். நாள்தோறும் 47 ஆயிரத்து 800 பேருக்கு விரைவு பரிசோதனையான ஆன்டிஜென் முறையில் தொற்று நோய் கண்டறியப்படும் முயற்சியில் இறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டாய பரிசோதனைக்கு மக்கள் மறுப்பு தெரிவித்தால், தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
**இறப்பு இல்லை**
இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் யாரும் இறக்கவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மாத துவக்கத்தில் இலங்கை அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியது.
இலங்கையில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் ஒரு புத்த துறவி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகளால்தான் உயிரிழந்தனர். தடுப்பூசி காரணமாக உயிரிழக்கவில்லை. இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருமே உயிரிழக்கவில்லை. இதுவரை, இலங்கை மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
**வினிதா**
�,