சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியா முழுவதும் இதுவரையில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து நாள்தோறும் நான்காயிரத்துக்கும் அதிகமான மக்களுக்குப் புதிதாக வைரஸ் பாதிப்புகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாக மேற்கொண்டாலும் கூட வைரஸ் குறித்த அச்சம் அனைவரிலும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு வேளை எதிர்பாராத விதமாகத் தங்களுக்குத் தொற்று ஏற்பட்டால் எவ்வாறு பரிசோதனை செய்வார்கள்? எங்கே அழைத்துச் செல்லப்படுவோம்? சிகிச்சை முறைகள் என்னென்ன? எத்தகைய உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்? எந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? என்று ஏராளமான குழப்பங்களும், கேள்விகளும் பொதுமக்களில் பலருக்கும் இருக்கிறது.
ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களது உடல்நிலை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படலாம், அரசு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படலாம், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் அல்லது அவர்கள் விருப்பபடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். ஓவ்வொரு இடத்திலும் வித்தியாசமான அனுபவங்கள் கொரோனா போராளிகளுக்குக் கிடைக்கிறது. பலரும் மக்களின் குழப்பங்களைத் தீர்க்கும் விதமாகத் தங்கள் அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னையை சேர்ந்த சாரதி குமரன் என்னும் இளைஞர் தான் கொரோனாவை எதிர்கொண்ட விதம் குறித்தும், அரசு முகாமின் நிலை குறித்தும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
**கொரோனா பரிசோதனையும், முடிவும்**
அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது “கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி இரவு இலேசான காய்ச்சலாக இருந்தது. ஜூன் 20ஆம் தேதி காலையிலும் அதே நிலை தொடர்ந்தது. வீடுவீடாக வந்த மாநகராட்சி ஊழியர்கள் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி கொண்டு என் உடல் வெப்பத்தை அளந்தனர். 38 செல்சியஸ் அளவிற்கு உடல் வெப்பமாக இருந்தது. அதைத் தொடர்ந்து எங்கள் பகுதியில் முகாமிட்டிருந்த மருத்துவர் பரிசோதனைக்கு செல்லுமாறு வலியுறுத்தினார். திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு பின்னால் அமைக்கப்பட்டிருந்த பரிசோதனை மையத்திற்கு சென்றேன்.
அங்கு பரிசோதனை கொடுக்க வந்தவர்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக அமர வைக்கப்பட்டிருந்தனர். ஏறத்தாழ 60 நபர்கள் அங்கு இருந்தனர். மூன்று மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கு இருந்த மருத்துவரிடம் பரிசோதனை அறிக்கை எப்பொழுது, எவ்வாறு தரப்படும் என்று கேட்டபொழுது, உங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால் இரண்டு நாட்களில் அலைப்பேசி வரும் கொரோனா தொற்று உறுதி செய்யாவிட்டால் எந்தவித ஃபோன் அழைப்பும் வராது என்று பதிலளித்தார். இரண்டு நாட்கள் சென்றது எந்த அழைப்பேசி அழைப்பும் வரவில்லை.
மூன்றாம் நாள் ஜூன் 23 அன்று காலை 9.30 மணிக்கு அலைபேசி அழைப்பு வந்தது. கால் செய்தவர் உங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இரண்டு ஆடைகள் மற்றும் செல்போன் சார்ஜர் எடுத்துக்கொண்டு தயாராக இருங்கள் இரண்டு மணிநேரத்தில் உங்களை அழைத்துச் செல்ல வாகனம் வரும் என்று கூறினார். ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் இருந்து எனக்கு காய்ச்சல் இல்லை என்று கூறினேன். இல்லை சார் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இரண்டு மணி நேரத்தில் தயாராக இருங்கள் இங்கிருந்து ஈக்காடுதாங்கல் பரிசோதனை மையத்திற்கு உங்களைக் கொண்டு செல்வோம். அங்கு ஸ்கேன், ஈசிஜி, எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை ஆகியவற்றை எடுத்த பின்பு உங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பார்கள். அதன் பிறகு வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று அவர் கூறினார்.
**மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட மக்கள்**
பிறகு நானும் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தயாராகிவிட்டேன். இரண்டு மணி நேரம் தாண்டியது, மூன்று மணி நேரம் தாண்டியது, இறுதியாக மதியம் இரண்டரை மணிக்கு அந்த மாநகராட்சி ஊழியர் கால் செய்தார். பின்பு வேன் வந்தது அதில் நான் உட்பட 12 நபர்கள் ஈக்காடுதாங்கல் பரிசோதனை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். சரியாக 3 மணிக்கு ஈக்காடுதாங்கல் சென்றடைந்தோம். அங்கும் மக்கள் சமூக இடைவெளி இன்றி ஒரு மைதானத்தில் பந்தல் போட்டு அமர வைக்கப்பட்டு இருந்தனர். அங்கு 300க்கும் மேற்பட்ட கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் இருந்தனர். 3 மணி வரை வந்தவர்களை மட்டும் பரிசோதனைக்கு வைத்துக்கொண்டு அதன் பிறகு வந்தவர்களை மீண்டும் அழைத்து சென்று வீட்டிலேயே விட்டுவிட்டு நாளை அழைத்து வருமாறு ஓட்டுநரிடம் அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்கள் கூறினர்.
ஈக்காடுதாங்கலில் முதலில் வந்தவர்களின் அடிப்படையில் பரிசோதனைக்காக பெயர்கள் அழைக்கப்பட்டன. மேலும் கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல், கடுமையான உடல் சோர்வுடன் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை சீக்கிரமாக பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வருபவர்களை பரிசோதனைக்குப் பிறகு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல், உடல் சோர்வு போன்று இருப்பவர்களை மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். அறிகுறிகள் எதுவும் இல்லாமல் உறுதி செய்யப்பட்டுள்ளது என அழைத்து வந்தவர்களின் வீட்டில் அவர்களுக்கு என தனியாக அறையும், கழிப்பறையும் இருக்கும் பட்சத்தில் அவர்களை வீட்டிற்கு அனுப்பி 14 நாட்கள் தனிமை படுத்துகின்றனர்.
**முகத்தைக் கூடப் பார்க்காத மருத்துவர்**
அவ்வாறு இல்லாதவர்களையும், குடிசைப் பகுதியிலிருந்து வருபவர்களையும் வீட்டிற்கு அனுப்பாமல் அவர்களை கொரோனா முகாமிற்கு அனுப்பி அங்கு பத்து நாட்கள் தனிமைப்படுத்திய பின்பு வீட்டிற்கு அனுப்புகிறார்கள். ஈக்காடுதாங்கலில் எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இறுதியாக அழைக்கப்பட்டனர். 3 மணிக்கு அங்கு சென்ற நிலையில் எந்தவித பரிசோதனையும் எடுக்கப்படாமல் இரவு 10 மணிக்கு மருத்துவரை சந்தித்தேன். என் முகத்தைக் கூடப் பார்க்காத அந்த மருத்துவர் புளியந்தோப்பு கொரோனா முகாமில் பத்து நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று என் மருத்துவ சீட்டில் எழுதிக் கொடுத்தார்.
இறுதியாக வந்த அறிகுறி இல்லாமல் தொற்றும் உறுதி செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்களுக்கும் இதே நிலை தொடர்ந்தது. இரவு 10:15 மணிக்கு ஈக்காட்டுதாங்கலில் எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதன்பிறகு இரவு 11.30 மணி அளவில் புளியந்தோப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின்பு 12.30 மணிக்கு மருத்துவர்களை சந்தித்தோம். பத்து நாட்களும் தினமும் காலையில் மூன்று வைட்டமின் மாத்திரைகள் போடுமாறு வைட்டமின் மாத்திரைகள் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் எங்களை அறைக்கு அனுப்ப இரவு 1.15 மணி ஆகிவிட்டது.
**புளியந்தோப்பு முகாம் எப்படி இருந்தது**
புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தால் புதிதாக கட்டப்பட்ட ஹவுசிங் போர்டில் தான் எங்களை தங்க வைத்தனர். ஒன்பது மாடிகளைக் கொண்ட இந்த ஹவுஸிங் போர்டு ஏ பி சி டி என நான்கு பிளாக்குகளாக இருந்தது. புதிதாகக் கட்டப்பட்டிருந்த வீடு என்பதால் பார்ப்பதற்கு சுத்தமாகவே இருந்தது. படிக்கட்டுகள் முழுவதும் கம்பிக் கதவுகள் கொண்டு பூட்டுப் போட்டுப் பூட்டப்பட்டு இருந்தன. மின்தூக்கி மூலமாக மட்டுமே மேலேயும் கீழேயும் செல்லமுடியும். ஏன் இப்படி படிக்கட்டுகளையும் பால்கனி களையும் கம்பி போட்டு பூட்டி வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டபோது, சிலர் அங்கிருந்து தப்பி செல்ல முயல்வதாகவும் அதனால் தான் இப்படி ஒரு அமைப்பு எனக் கூறினர்.
அங்கு ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு அறை இருந்தது ஒரு அறையுடன் இணைப்பாக குளியலறையும் மற்றொரு அறையுடன் இணைப்பாக கழிவறையும் இருந்தது. இரண்டு அறைகளைக் கொண்ட ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு நபர்கள் தங்க வைக்கப்பட்டனர். தினமும் காலையில் ஒரு மருத்துவர் வருவார். ஒவ்வொரு தளத்திலும் ஒலிபெருக்கி மூலமாக யாருக்காவது ஏதேனும் தொந்தரவு உள்ளதா என்று கேட்பார், யாருக்காவது ஏதேனும் தொந்தரவு இருந்தால் அவரிடம் கூறினால் அதற்கு அவர் மாத்திரை அளிப்பார். அதன்பிறகு அன்றைக்கு அங்கிருந்து செல்பவர்களின் பெயர்கள் வாசிக்கப்படும் அவர்கள் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மின்தூக்கி வழியாக கீழே செல்ல வேண்டும். அதன்பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இறுதி நாளன்று எந்த ஒரு பரிசோதனையும் செய்யப்படாமல் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.
**புளியந்தோப்பு முகாமில் கொடுக்கப்பட்ட உணவுகள்**
*காலை 8 மணி கபசுரக் குடிநீர், அடுத்த பத்து நிமிடத்தில் தேனீர்*
*காலை 9 மணிக்கு ஒரு அவித்த முட்டை அதனுடன் காலை உணவும் வழங்கப்படும்( இட்லி தோசை பொங்கல் உப்புமா)*
*காலை 11 மணிக்கு ஒரு ஆரஞ்சு பழம் வழங்கப்பட்டது*
*மதியம் 1 மணிக்கு மதிய உணவு வழங்கப்பட்டது( வெள்ளை சோறு, சாம்பார் ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், ஊறுகாய் அதனுடன் ஒரு வாழைப்பழம்)*
*மாலை 5 மணிக்கு மீண்டும் கபசுரக் குடிநீர் அடுத்த பத்து நிமிடத்தில் தேனீர், அதனுடன் வேர்க்கடலை, சுண்டல், கொண்டைக்கடலை போன்ற தானிய வகை ஏதேனும் ஒன்று வழங்கப்பட்டது.*
*இரவு 8 மணிக்கு இரவு உணவு வழங்கப்பட்டது (இடியாப்பம், தோசை, உப்புமா)*
இந்த உணவுப் பொருட்கள் நம் அறைக்கே கொண்டு வந்து கொடுக்கப்படும். செவிலியர்களும் மருத்துவர்களும் நம் அறை பக்கம் வர மாட்டார்கள். ஹவுஸ் கீப்பிங் வேலை செய்பவர்களே உணவுகளைக் கொண்டு வந்து அறையில் கொடுப்பது, அறையை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்வார்கள். நமக்கு ஏதேனும் தேவை இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பினால் மறுநாள் அதை வாங்கி வருவார்கள். மேலும் வீட்டில் இருந்து நமக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என்றால் கீழே அதைக் கொடுத்துவிட்டு நம் பெயரையும் நான் இருக்கும் அறையின் எண் எந்த தளம் என்பதைக் கூறினால். ஹவுஸ் கீப்பிங் வேலை செய்பவர்கள் அதை நம் அறைக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள்.
இவ்வாறு ஜூன் 23ஆம் தேதி இரவு முதல், ஜூன் 30ஆம் தேதி வரை ஏழு நாட்கள் புளியந்தோப்பு முகாமில் இருந்தேன். ஜூலை 1 ஆம் தேதி காலை நான் வீட்டிற்கு செல்லலாம் என என் பெயர் வாசிக்கப்பட்டது. மதிய உணவிற்குப் பின்னர் கீழே வருமாறு கூறினார். கொரோனா உறுதி செய்யப்பட்டது என்று கூறியதை தவிர்த்து எந்த ஒரு பரிசோதனையும் செய்யப்படாமல் ஏழு நாட்கள் புளியந்தோப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பிறகும் எந்த ஒரு பரிசோதனையும் செய்யப்படாமல், ஜூலை ஒன்றாம் தேதி வீட்டிற்கு வந்துவிட்டேன். ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று(ஜூலை 5) இப்பொழுது இந்தப் பதிவை போடும் வரையில் எந்த ஒரு காய்ச்சலும் இருமலும் சளியும் வேறு எந்த ஒரு அறிகுறியும் வரவில்லை. உடல்நிலை எப்பொழுதும் போன்று நலமாகவே உள்ளது.
**கொரோனா முகாமில் நான் சந்தித்த நபர்கள்**
ரோகித் சர்மா ராஜஸ்தானை சேர்ந்தவர். 14 ஆண்டுகளாக தமிழகத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர். இவர் கோவிலம்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டு உரிமையாளர் இவரை வீட்டை காலி செய்யக் கட்டாயப்படுத்துகிறார். ஜூலை ஒன்றாம் தேதி வீட்டை காலி செய்ய வேண்டுமாம். ஆனால் இவர் வீட்டிற்கு வர கூடாதாம். வேறு யாரேனும் நபர்களை அனுப்பி வீட்டை காலி செய்து போகுமாறு அந்த வீட்டு உரிமையாளர் கூறினார்.
இளம்பருதி சென்னை பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் பயிலும் மாணவர். இவரும் நான் இருக்கும் அதே தளத்தில் தான் தங்கியிருந்தார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு புளியந்தோப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டு ஏழு நாட்கள் முடிவடைந்த நிலையில் இவரை முகாமிலிருந்து செல்லுமாறு கூறினார்கள். இவர் சென்னை பல்கலைக்கழக தரமணி மாணவர் விடுதியில் தங்கி இருந்தார். சென்னை பல்கலைக்கழக தரமணி மாணவர் விடுதி கொரோனா முகமாக மாற்றப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை கிண்டி வளாகத்தில் தங்க வைத்திருந்தனர்.
இளம்பரிதி ஏழு நாட்கள் முடிவடைந்த நிலையில் அவரை மீண்டும் மாணவர் விடுதிக்கு வரவேண்டாம், மேலும் ஒரு பதினான்கு நாட்கள் உங்களை எங்கேயேனும் தனிமைப்படுத்திக் கொண்டு அதன் பிறகு மாணவர் விடுதிக்கு வருமாறு கூறப்பட்டது. வெளி மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து தங்கி இருக்கும் இளம்பருதி தற்போது தன் மாவட்டத்திற்கும் செல்ல முடியாமலும் மாணவர் விடுதிக்கு செல்ல முடியாமலும் புளியந்தோப்பு முகாமிலேயே கடந்த 14 நாட்களையும் தாண்டி தங்கி வருகிறார். 14 நாட்கள் முடிவடைந்த நிலையில் இளம் பரிதியை புளியந்தோப்பு முகாமிலிருந்து செல்லுமாறு அங்கு இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர். ரேவதி சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் இவர் நான்காயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வீட்டு வேலை செய்து வருகிறார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு வேலைக்கு வரவேண்டாம் என அவரை கூறிவிட்டார்கள்.
இதுவே கொரோனாவில் நான் பெற்ற அனுபவமும் நான் பார்த்த அனுபவமும். இந்தப் பதிவின் முக்கிய நோக்கம் என்னவென்றால் வரும் நாட்களில் உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தொற்று உறுதியானது என்றால், யாரும் பதட்டமும் பயமும் இல்லாமல் இதை கையாள வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை எப்படி இருக்கிறது என்பதை கூறுவதற்காகவே இந்த பதிவு.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு இடங்களில் உள்ள கொரோனா முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் மக்களின் அனுபவங்கள் வேறுபடலாம். ஆனால் எதையும் துணிவுடன் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அலட்சியம் காட்டாமல் இருந்தாலே நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள இயலும். சத்தான உணவு மற்றும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் கொரோனா நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்வோம். அதையும் மீறி நமக்கே தெரியாமல் தொற்று ஏற்பட்டுவிட்டாலும் சோர்ந்து போகாமல் வைரஸை உறுதியுடன் வெற்றிகொள்வோம்.
*நன்றி: சாரதி குமரன்*
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”