கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை: மத்திய அரசு எச்சரிக்கை!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் மற்றும் கையுறைகளைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று (மார்ச் 6) எச்சரித்துள்ளது.

கொரோனா வைரசால் இந்தியாவில் 31 பேர் பாதிக்கப்பட்டிருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இருமல் மற்றும் தும்மல் வரும்போது முகத்தினை மூட வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவ வேண்டும், கண்கள் மூக்கு வாய் ஆகிய பகுதிகளை அவசியமின்றி தொடுவதைத் தவிர்க்க வேண்டும் , பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தற்காப்பு நடவடிக்கையாகப் பலரும் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து வெளியே செல்கின்றனர். இதனால் மாஸ்கின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்துள்ளது. எனவே கூடுதல் விலைக்கு மாஸ்க் , கையுறை ஆகியவை விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய ரசாயன மற்றும் மருந்துகள் துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், ”மாஸ்க் பற்றாக்குறை அல்லது விலை அதிகரித்ததாக எந்தவொரு அறிக்கையும் அரசாங்கத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை. மாஸ்க் மற்றும் கையுறைகளைப் பதுக்குவோர் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதுமான அளவு மாஸ்க் இருப்பில் உள்ளதை உறுதி செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share