�
மைக்ரோசாப்ட் அறக்கட்டளையின் மூலம் பருவநிலை மாற்றம், கல்வி, பொதுமக்கள் சுகாதாரம் ஆகியவற்றில் அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருப்பதால் மைக்ரோசாப்ட் தலைமை குழுவிலிருந்து விலகியிருக்கிறார் நிறுவனத்தின் இயக்குநர் பில்கேட்ஸ்.
உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸுக்கு தற்போது 65 வயது ஆகிறது. தினம்தோறும் அலுவலகத்துக்கு சென்று பணிபுரிவதை 2008ஆம் ஆண்டுடன் நிறுத்திக்கொண்ட பில்கேட்ஸ், தற்போது மைக்ரோசாப்ட் தலைமை குழுவிலிருந்தும் விலகியிருக்கிறார்.
தலைமை குழுவிலிருந்து விலகியிருந்தாலும், நிர்வாகத்துக்குத் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார் பில்கேட்ஸ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது தன்னுடைய அடுத்த கட்டத்தில் தனக்கு முக்கியமான நண்பர்களையும் உறவுகளையும் பேண விரும்புவதாகவும், தன்னுடைய நிறுவனங்களுக்கு உதவிகளைச் செய்துவரும் அதே வேளையில் உலகின் மிகக்கடினமானப் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டிருக்கும் உலகின் பணக்காரர்கள் பட்டியலில், பில்கேட்ஸ் 2ஆம் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது .
கல்லூரிப்படிப்பை முடிக்காமல் பாதியில் விலகிய பில்கேட்ஸ் தன்னுடைய சிறுவயது நண்பர் பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975 ஆம் ஆண்டு துவங்கினார். 1986 ஆம் ஆண்டு தனது 31 வயதில் உலகின் சுயமாக உருவான இளம் கோடிஸ்வரராக அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
*பவித்ரா குமரேசன்**�,