தீபாவளி மற்றும் தொடர்மழை காரணமாக கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதை ஈடுகட்ட அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் ஆன்லைன் வழியாக பாடம் கற்று வந்தனர். தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 1ஆம் தேதி முதல் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஆனால், தீபாவளி பண்டிகை காரணமாக கடந்த நவம்பர் 4, 5 ஆகிய தேதிகள் விடுமுறை அளிக்கப்பட்டன. இதையடுத்து, தொடர்மழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை நாட்களானது. தற்போது சில மாவட்டங்களில் மழை ஓய்ந்தாலும் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால், மழை ஓய்ந்த பகுதிகளில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தீபாவளி, தொடர்மழை என பள்ளிகளுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடுகட்ட அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
இதுதொடர்பான வழக்கொன்றில் நேற்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ”கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், ஊரடங்கால் மாணவர்களிடையே பள்ளி செல்லும் ஆர்வம் குறைந்துள்ளது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,