விரைவில் நடைபெற இருக்கும் விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்குமா அளிக்காதா என்பது ஆரம்பத்திலேயே தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரிய கேள்வியாக இருந்தது.
பாஜகவின் ஆதரவை அதிமுகவுக்கு தருவது பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்த நிலையில், அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். இந்நிலையில் பாஜகவின் வற்புறுத்தலின் பேரில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கே நேரில் சென்று அதிமுகவுக்கு பாஜகவின் ஆதரவைக் கோரினார்.
அதன் பிறகு பாஜக தனது ஆதரவை அறிவித்ததே தவிர தேர்தல் களத்தில் பாஜகவினருடைய பணிகள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் பிரச்சாரத்திற்கு சென்ற நிலையில், பாஜக தலைவர்கள் யாரும் அதிமுக வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்யவில்லை.
இதற்கிடையில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதிக்கு சென்றுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.
அதிமுக வேட்பாளருக்கு பரப்புரை செய்யலாம் என அவர் திட்டமிட்டு சென்ற நிலையில் விழுப்புரம் மாவட்ட பாஜக வினர் அவரிடம் சொன்ன தகவல்களைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டார். “நம்மையெல்லாம் அதிமுக காரங்க மதிக்கிறதே இல்ல. தேர்தல் பணியில் நம்மள கூப்பிடுவது இல்லை. பாஜக கொடி கூட கட்ட கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்படியே நம்ம கட்சிக்காரங்க தானா போய் வேலை செஞ்சாலும், தேர்தல் பணிக்கு நமக்கு செலவுக்கும் பணம் தருவதில்லை” என்று அடுக்கடுக்கான புகார்களை ராதாகிருஷ்ணனிடம் சொல்லியிருக்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட பாஜக வினர். அதிமுகவிடம் பணம் கேட்காதீங்க என்று சொன்ன பொன்.ராதாகிருஷ்ணன் உடனடியாக தமிழ்நாடு பாஜக சார்பாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக விழுப்புரம் பாஜகவினருக்கு 5 லட்ச ரூபாய் வழங்கியிருக்கிறார். இதை அறிந்த அமைச்சர் சி.வி. சண்முகம் உடனடியாக அதிமுக நபர்கள் மூலம் விழுப்புரம் பாஜகவினருக்கு பணம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். ஆனால் அதை மாவட்ட பாஜக நிர்வாகிகள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் விழுப்புரம் வந்திருப்பது தெரிந்தும் அவருக்கு பிரச்சார ஏற்பாடுகள். வேட்பாளருடனான ஒருங்கிணைப்பு, வாகன ஏற்பாடு என எதுவும் அதிமுக தரப்பில் செய்துகொடுக்கப்படாததால் கோபமான பொன்னார் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திவிட்டுப் புறப்பட்டார். அந்த செய்தியாளர் சந்திப்பில், “அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்காக விழுப்புரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மட்டுமல்ல, அண்டை மாவட்ட பாஜக நிர்வாகிகளும் பாடுபட்டு வருகின்றனர்” என்று கூட்டணி தர்மத்துக்காக குறிப்பிட்டார்.
.
தமிழக பாஜக தலைவர்களை அதிமுக தலைமை திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகவும் இடைத் தேர்தல் பிரச்சாரங்களில் தமிழக பாஜக தலைவர்களை அதிமுக முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அகில இந்திய பாஜக தலைமைக்கு பொன்ராதாகிருஷ்ணன் புகார் அனுப்பி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
பாஜக பிரமுகர்கள் பிரச்சாரம் செய்வதை அதிமுக விரும்பவில்லை என்றும், அதனால்தான் பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தைத் தடுக்கிறார்கள் என்றும் டெல்லிக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.
அதிமுக பாஜக இடையே இடைத்தேர்தல் விவகாரத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட விரிசல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
�,