முடி காணிக்கைக்குக் கட்டணம் வசூலித்தால் பணி நீக்கம்!
தமிழ்நாடு கோயில்களில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் பணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட பணியாளர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று இந்து அறநிலையத் துறை எச்சரித்துள்ளது.
சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சேகர்பாபு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கோயில்களில் மொட்டை போட இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு இடம் பெற்றது.
தொடர்ந்து மொட்டை போடும் பணியாளர்களுக்கான கட்டணத்தை கோயில் நிர்வாகம் வழங்கும். மேலும், அந்தப் பணியாளர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆனால், சில கோயில்களில் முடி காணிக்கை செலுத்த வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து இந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து இணை இயக்குநர்கள், துணை உதவி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முடி காணிக்கை கட்டணச் சீட்டு நடைமுறையில் இருக்கும் கோயில்களில் கட்டணச் சீட்டு பங்குத் தொகை கோயில் மூலம் சம்பந்தப்பட்ட பணியாளருக்கு அளிக்கப்படும். இதுபோக, ரூ.5,000 ஊக்கத்தொகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொட்டை போடும் பணியாளர்கள் முடி காணிக்கை செலுத்துபவரிடம் எந்தவிதமான கட்டணத்தையும் கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது காவல் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கு நடவடிக்கை மூலமாக பணி நீக்கம் அல்லது உரிமம் ரத்து செய்யப்படும். இவர்களுக்குப் பதிலாக புதிய நபர்களை கோயில் நிர்வாகம் பணி அமர்த்தி கொள்ளலாம். எந்த காரணத்தைக் கொண்டும் பணி நீக்கம் அல்லது உரிமம் ரத்து செய்யப்பட்ட நபர்களை மீண்டும் பணியமர்த்தக் கூடாது.
கோயில் நிர்வாகிகள் அவ்வப்போது முடி காணிக்கை செலுத்தும் இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கூடுதல் கட்டணம் தொடர்பான எந்தவொரு புகாருக்கும் இடமளிக்காமல் கண்காணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-வினிதா**
�,”