V720 தனியார் பள்ளிகள் மீது விசாரணை!

Published On:

| By admin

பஞ்சாப்பில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி அரசு, அதிக கட்டணம் வசூலிக்கும் 720க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அரசு விதிமுறைகளை மீறி இந்தப் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கான உத்தரவை மாநிலத்தின் கல்வி அமைச்சர் குர்மீத் சிங் வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மன், தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது, குறிப்பிட்ட கடைகளில் மாணவர்களை புத்தகம், சீருடை, ஸ்டேஷனரி பொருட்கள் போன்றவற்றை வாங்க வற்புறுத்துவதாக அரசுக்கு புகார் வருகிறது. இது தொடரக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டார்.
அரசின் இந்த உத்தரவு குறித்து ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் மல்வீந்தர் சிங் கங் கூறுகையில், “மாநிலத்தில் தரமான கல்வியை அனைவரும் பெற பஞ்சாப் முதலமைச்சர் தலைமையிலான அரசு முனைப்பு காட்டியுள்ளது. அதன் முக்கிய நடவடிக்கையாக அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. விசாரணையில் பள்ளிகள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அந்த நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. டெல்லி அல்லாமல் மற்றொரு மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது இதுவே முதன்முறை. டெல்லி மாடல் ஆட்சி என்ற கோஷத்துடன் பஞ்சாப் மக்களிடம் தேர்தலைச் சந்தித்து ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் மின் விநியோகம் போன்ற அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share