ரஜினிகாந்த் நடிக்கும் 2.O பட வியாபாரம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்க, லைகா தயாரிக்க, ரஜினி, எமி ஜாக்ஸன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துவரும் படம் 2.O. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் போஸ்டர்கள், டீசர் போன்றவை வெளியாகிக் கவனத்தைப் பெற்றன.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் சில லிரிக்கல் வீடியோக்களும்கூட ரசிகர்களின் மத்தியில் பேசுபொருளாகின. படத்தின் வெளியீட்டுத் தேதி பலமுறை தள்ளிக்கொண்டே வந்த நிலையில் கடைசியாக நவம்பர் 29ஆம் தேதி படத்தை வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் பிரமாண்ட பொருட்செலவில் படமாக்கப்பட்டு வருவதால் படம் வியாபார ரீதியில் எந்தளவு வரவேற்பைப் பெறும் எனும் எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவிவருகிறது. இந்த நிலையில் படத்தின் வியாபாரம் தொடர்பான முக்கிய விவரம் தற்போது வெளிவந்துள்ளது.
அதன்படி, இந்தப் படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதி விநியோக உரிமையை ‘என்விஆர்’ எனும் நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளது. இதை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 31) கூறியுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அறிவிக்கப்பட்டுவிட்டதால் விரைவிலேயே தமிழக திரையரங்க உரிமை குறித்த விவரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,