இரவுநேர ஊரடங்கு : சென்னையில் 10 ஆயிரம் போலீசார்!

Published On:

| By Balaji

சென்னையில் இரவு நேர ஊரடங்கின்போது 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு, டிசம்பர் 28 ஆம் தேதி ஒரு சதவிகிதமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 7.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 7.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால், சென்னையில் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க 499 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரம் செய்வோர் என அனைவருமே இரவு பத்து மணிக்குள் வேலைகளை முடித்து கடைகளை அடைத்துவிடவேண்டும். அத்தியாவசிய பணிகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக செல்வோர் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள். தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

அதுபோன்று, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்களில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 36 இடங்களில் வாகன சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.

அதுபோன்று திருச்செந்தூர் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் முடிந்தளவு இரவு 10 மணிக்கு மேல் நேரத்தில் பாத யாத்திரை செல்வதைத் தவிர்த்து கொரோனா பரவலைத் தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தையும் பார்க்கும்போது இரவு நேர ஊரடங்கு மிகவும் கெடுபிடியாக இருக்கும்போல் தெரிகிறது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share