மின்துறை சீரமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.7,054 கோடி!

Published On:

| By admin

தமிழகத்துக்கு மின்சாரத் துறை சீரமைப்புக்காக ரூ.7,054 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் மின்சாரத் துறை சீரமைப்புக்காக தமிழகம், ஆந்திரம், உத்தரப்பிரதேசம், அசாம், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழகத்துக்கு மட்டும் ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது நிதி விவரங்கள்… ராஜஸ்தான் – ரூ.5,186 கோடி, உத்தரப்பிரதேசம் – ரூ.6,823 கோடி, ஆந்திரம் – ரூ.3,716 கோடி, ஒடிசா – ரூ.2,725 கோடி, அசாம் – ரூ.1,886 கோடி, ஹிமாச்சல் பிரதேசம் – ரூ.251 கோடி, மேகாலயா – ரூ.192 கோடி, சிக்கிம் – ரூ.191 கோடி, மணிப்பூர் – ரூ.180 கோடி.
மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள் பயன்படுத்தும் முன்னிலை நாடுகளில் இந்தியா நான்காவது நாடாக விளங்குகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்வேறு மரபுசார்ந்த அனல், புனல் (நீர்), காற்று, அணு மற்றும் சூரிய ஒளி ஆற்றலைக் கொண்டு மாநில, மத்திய மற்றும் தனியார் மின் உற்பத்தி திட்டங்களுடன் கிட்டத்தட்ட 13,231.44 மெகாவாட் அளவுக்கு மின் நிறுவு திறனை பெற்றுள்ளது. இவை தவிர, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக் கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் சுமார் 8470.16 மெகாவாட் அளவு மின் நிறுவு திறன் கொண்டுள்ளது. மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிப்பதில் இந்தியாவிலுள்ள மற்ற மாநில மின்சார வாரியங்களை விட தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னோடியாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

**- ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share