அசைவம் நம் அத்தனைபேரின் வாழ்விலும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. தேசிய மாதிரி புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள, இந்தியர்களின் உணவுப்பழக்கம் தொடர்பான ஆய்வில் 70% இந்தியர்கள் அசைவப் பிரியர்கள் என்பது தெரியவந்துள்ளது.
2014ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மட்டும் 71.6 சதவிகித ஆண்களும், 70.7 சதவிகித பெண்களும் அசைவ உணவுகளையே விரும்புகிறார்கள். 28.4 சதவிகித ஆண்களும், 29.3 சதவிகித பெண்களும் சைவ உணவுகளை விரும்புகிறார்கள். குறிப்பாக, தமிழகத்தில் 97.8 சதவிகித ஆண்களும், 97.5 சதவிகித பெண்களும் அசைவ உணவுகளை விரும்புகிறார்கள். 2.2 சதவிகித ஆண்களும், 2.5 சதவிகித பெண்களும் சைவ உணவுகளை விரும்புகின்றனர். இதுபோலவே கேரளாவிலும், மேற்குவங்கத்திலும், ஆந்திரப்பிரதேசத்திலும் அசைவப் பிரியர்களே அதிகமாக உள்ளனர்.
அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் எந்தவித பாதிப்பும் கிடையாது. அசைவம் இன்றைய இளம்தலைமுறையினரை கவரும் உணவாக இருக்கிறது. வறுத்த சிக்கன்களை அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலக் குறைபாடுகள் உருவாகலாம் என எச்சரிக்கிறார் டயட்டீஷியன் தரணி கிருஷ்ணன். அசைவம் இல்லாத வீடுகளே இல்லை எனும்நிலையில், பிரியாணி என்றாலே அது அனைவரையும் கவரும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாதான் பிரியாணியின் சொர்க்கமாக இருக்கிறது. இங்குதான் அதிக பிரியாணி விற்பனையாகிறது.
பல கல்லூரிகள், அலுவலகங்களில் குறைவான நபர்களால் உண்ணப்படும் அசைவ உணவுகளை உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் காணப்படும் இந்த அசைவ உணவு விருப்பம்பற்றி நீரிழிவு ஆலோசகர் என்ன சொல்கிறார்: “ மக்கள் அதிகமாகச் சாப்பிடும் அசைவ உணவுகளில் மீன், சிக்கன், மாட்டு இறைச்சி என எதுவாக இருந்தாலும் அதற்கு இணையாக உடற்பயிற்சி இருக்க வேண்டும். ஆனால், இதை மக்கள் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. மேலும், உடல் பருமன் இப்போதைய இளைஞர்களிடம் பிரதான பிரச்னையாக உருவாகி வருகிறது. நீரிழிவு நோய் என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது என்று நீரிழிவு நிபுணர் டோபி ஜோசப் கூறினார்.
வெவ்வேறு பண்பாடுகளைக்கொண்ட இந்தியச் சமூகங்களில்தான் உணவுகளிலும் உயர்வு, தாழ்வு உள்ளது. உணவை உடல்நலம் சார்ந்து அணுகுவது ஒன்றே ஆரோக்கியமான அணுகுமுறை. ஊட்டச்சத்துக்கும் அசைவ உணவுகளும் அவசியம். சைவ உணவுகளும் அவசியம். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றுசொன்ன, நமது முன்னோர்களின் மொழியை இன்று கவனமாக யோசித்தே கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அந்தப் பழமொழி உருவான காலத்தில் இருந்த அரிசியும் சிக்கனும் வேறு, நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய அரிசியும் சிக்கனும் வேறு. நமக்கும் நம் சந்ததிக்கும் எது தேவையோ அதை உண்போம்! உடல்நலம் பேணுவோம்!.�,