2018ல் இந்தியாவில் ஏற்பட்ட சாலை விபத்துகள் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவு மூலம் தெரியவந்தது. 63,920 சாலை விபத்துகள் கடந்த ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டன. அந்த வகையில் 2019ஆம் ஆண்டிலும் சாலை விபத்துகள் ஏற்படுவது என்பது அதிகரித்துள்ளது.
இன்று அதிகாலை மதுரை அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் 3 புகைப்பட கலைஞர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.
புளியங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் வந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்கள் திருமங்கலத்தைச் சேர்ந்த தினேஷ் (26). மதுரை பழங்காநத்ததைச் சேர்ந்த பிரசன்ன குமார் (26), குணா (23) என்பது தெரியவந்துள்ளது. தினேசுக்கு நேற்று பிறந்தநாள் என்று சொல்லப்படுகிறது.
இதனால் பிறந்தநாளை பழங்காநத்தத்தில் உள்ள பிரசன்னகுமார், குணா ஆகியோரது ஸ்டூடியோவில் கொண்டாடியிருக்கின்றனர். கொண்டாட்டத்தை முடித்துவிட்டுச் சென்று கொண்டிருக்கும்போது தான் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது உடல்களை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
�,”