கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா பகுதியில் நடந்த கார் விபத்தில் ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாஷின் மகன் கருணாசாகர். கருணாசாகருக்கு திருமணம் நடைபெறவுள்ள உள்ள நிலையில் பெங்களூருவில் உள்ள தனது நண்பர்களை சந்திக்க நேற்று சென்றுள்ளார். பின்பு தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவில் பெங்களூரிலிருந்து ஓசூருக்கு ஆடி காரில் வந்துள்ளார்.
நள்ளிரவு ஒன்றரை மணியளவில் கோரமங்கலா அருகே வந்தபோது, சாலையோர தடுப்பு சுவரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓசூர் எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த அனைவருமே 30 வயதுக்குள்ளானவர்கள்.
கருணாசாகர், மற்றும் அவர் திருமணம் செய்ய இருந்த பிந்து, கேரளாவைச் சேர்ந்த அக்ஷய் கோயல், இஷிதா , தனுஷா , ஹூப்ளி ரோஹித், ஹரியானாவைச் சேர்ந்த உத்சவ் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
காரில் இருந்த யாரும் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை என்றும், அதனால்தான் விபத்தின்போது காற்றுப்பைகள் வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் அதிவேகத்தில் வந்த ஆடி கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் எம்எல்ஏவின் மனைவி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அடுத்த நான்கு மாதங்களில் பிரகாஷ் தன்னுடைய மகனை இழந்துள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த ஓசூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வின் மகன் கருணா சாகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோரமான சாலை விபத்தில் சிக்கி கருணாசாகர் உயிரிழந்தது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**
�,”