தமிழ்நாட்டில் 2022-23 கல்வியாண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் போது, 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ’’தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும், 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அதனை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “2022-23 கல்வியாண்டு முதல் விருதுநகர் மாவட்டம்-திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம்-திருக்கோயிலூர், ஈரோடு மாவட்டம்-தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம்-மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம்-எரியூர், புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி மற்றும் வேலூர் மாவட்டம்-சேர்க்காடு ஆகிய 9 இடங்களில் இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம்-கூத்தாநல்லூரில் ஒரு மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு கல்லூரியிலும் இளங்கலை (தமிழ், ஆங்கிலம்) இளமறிவியல் (கணிதம்), இளநிலை (வணிகவியல்) மற்றும் இளமறிவியல் (கணினி அறிவியல்) ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்குவதற்கு அனுமதியும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 17 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 17 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் வீதம் 10 கல்லூரிகளுக்கு மொத்தம் 170 ஆசிரியர்கள் மற்றும் 170 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,