மின்சாரப் பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குள் வராதா?

Published On:

| By Balaji

தமிழக அரசால் அண்மையில் பொதுப் போக்குவரத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுடையது அல்ல என்றும், இது போக்குவரத்துக் கழகத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சி என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இன்று (அக்டோபர் 9) அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள தகவலில்,

“அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 525 மின்சாரப் பேருந்துகளை இயக்கப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மின்சாரப் பேருந்துகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த உயர் தொழில்நுட்பங்கள் வரவேற்கத்தக்கது.

ஆனால், மாநில அரசு இந்த பேருந்துகளை தனியாரிடம் இருந்து வாடகைக்கு பெறுவதாகவும், ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்ப பணிகள் அந்த தனியாரே பார்த்துக் கொள்வார் என்றும், நடத்துநர் மட்டுமே போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அறிவித்துள்ளது. இது தனியார்மயத்திற்கான கால்கோல் விழாதான் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.

ஏற்கனவே ஜெயலலிதா அவர்கள் 2002ம் ஆண்டு போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு, கடும் எதிர்ப்பிற்கு பிறகு திரும்பப் பெற்றார். அதிமுக, திமுக இரண்டு அரசுகளுமே தொடர்ந்து போக்குவரத்துத்துறை லாபத்திற்காக நடத்தப்படவில்லை என்றும், இதை தனியார்மயமாக்கும் எண்ணமே இல்லை என்றும் சட்டமன்றத்திலேயே சத்தியம் செய்துள்ளன.

இப்போதைய இந்த நடவடிக்கை அதிமுக அரசு போக்குவரத்துத்துறையை பொதுத்துறையாக நீடிக்கும் முடிவைக் கைவிட்டதையே குறிக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழகத்தின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் தொழிலுக்கும், பொருளாதார செயல்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கிற போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் எந்த முயற்சியையும் மாநில அரசு எடுக்கக் கூடாது என்றும், மின்சாரப் பேருந்துகளை மாநில அரசே இயக்க வேண்டும் என்றும், தொழிலாளர் வேலைவாய்ப்புகளைப் பறிக்கக் கூடாது” என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பாக வலியுறுத்தியிருக்கிறார் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share