தரணி தங்கவேலு
வாடகைத் தாய் சட்ட மசோதா எப்படி இயற்றப்பட்டது?
கடந்த 15 ஆண்டுகளில், பிள்ளைப்பேறின்மையை எதிர்கொள்ள உதவும் சோதனைக் குழாய் குழந்தை முறை (In Vitro Fertilisation), செயற்கை விந்தூட்டல் (Artificial Insemination) முதலிய நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பங்களைக் கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் 2005இல் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் போக, அதே அமைப்பு 2008இல் இனப்பெருக்க உதவித் தொழில்நுட்ப (ஒழுங்குபடுத்தும்) மசோதாவை உருவாக்கியது. இந்த மசோதா 2010, 2014இல் திருத்தி வரையப்பட்டது. அதன்பிறகு ஐந்தாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த மசோதாவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேபினட் ஒப்புதல் வழங்கியது.
இனப்பெருக்க உதவித் தொழில்நுட்ப (ஒழுங்குபடுத்தும்) மசோதா பிள்ளைப்பேறுக்கு உதவும் பல்வேறு மருத்துவ முறைகளை நெறிப்படுத்த முனைகிறது. வாடகைத் தாய்மை குறித்த மசோதா வாடகைத் தாய் முறையை மட்டும் முறைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா, 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்பு மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதாவை பல்வேறு கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதனையடுத்து, நாடாளுமன்றத் தேர்வுக்குழுவின் சீராய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. **பிப்ரவரி மாதத்தில் தேர்வுக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், ‘நெருங்கிய உறவினர்’ மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும் என்கிற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘விருப்பமுள்ள எந்தப் பெண்ணும்’ வாடகைத் தாயாகலாம் என்று மாற்றலாம் என்று பரிந்துரைத்தது.**
இவை போக வேறு பல பரிந்துரைகளையும் வழங்கியது. அவற்றுள் சில… வாடகைத் தாய் முறையை நெறிப்படுத்த முனையும் மசோதாவுக்கு முன்பு இனப்பெருக்க உதவித் தொழில்நுட்ப மசோதாவை அறிமுகப்படுத்துவது, **வாடகைத் தாய் முறை தனியராக இருக்கும் பெண்களும் பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்வது, திருமணத்துக்குப் பின்பு பெண் கர்ப்பம் தரிக்க முடியாது என்று சான்றளிக்கப்பட்டால் ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிற காலக்கெடுவை தள்ளுபடி செய்வது.**
**நெருங்கிய உறவினரா… விருப்பமுள்ள எந்தப் பெண்ணுமா?**
‘நெருங்கிய உறவினர்’ மட்டுமே வாடகைத் தாயாக இருக்க இயலும் என்கிற விதியானது மிகவும் சர்ச்சைக்குரியது; நடைமுறைக்கு ஒவ்வாதது மட்டுமல்ல, அமல்படுத்தவும் முடியாதது என்று கருத்துரைத்தது நாடாளுமன்றத் தேர்வுக்குழு. **பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமில்லை என்பதை மசோதா கணக்கில்கொள்ளத் தவறிவிட்டது என்றும் சுட்டிக்காட்டியது. மேலும், இத்தகைய கட்டுப்பாடு வாடகைத் தாய்களைச் சுரண்டாமல் காக்க வேண்டும் என்கிற இலக்கோடு கொண்டு வரப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் மசோதாவின் நோக்கத்திற்கே எதிர்மறையானது**, என்றது.
முந்தைய பதிப்பான வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா, 2016இன் மீதான நிலைக்குழு பரிந்துரைகளை அரசு கண்டுகொள்ளாத நிலையில் தேர்வுக்குழு எண்ணற்ற மாற்றங்களை பரிந்துரைத்தன என்பதை நினைவுகூர வேண்டியிருக்கிறது. நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பங்களில் வாடகைத் தாய் முறையானது மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இதை மட்டும் முறைப்படுத்த முனைவது இன்னபிற இனப்பெருக்கத் தொழில்நுட்பங்களை முறைப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றி, அமல்படுத்தாத வரை சுரண்டலை தடுக்கும் முயற்சிகளால் தாக்கம் ஒன்றும் ஏற்படாது என்கிறார் மும்பையைச் சேர்ந்த நுட்பத்துணை கருத்தரிப்புத் துறை வல்லுநரான மருத்துவர் பரீக்ஷித். **“வெறும் 2 சதவிகிதத் தம்பதியினர் மட்டுமே வாடகைத் தாய் முறையைப் பயன்படுத்துகிறார்கள்”** என்கிறார்.
**யாருக்கானது இந்த இனப்பெருக்கத் தொழில்நுட்பம்?**
தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்புச் சட்டம், செயல்திட்டம், ஆட்சி நிர்வாக மையத்தின் செயல் இயக்குநரும், இணைப் பேராசிரியருமான மிருணாள் சதீஷ் நாடாளுமன்ற நிலைக்குழுவின் 2017ஆம் ஆண்டு அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்…
“…**வாடகைத் தாயோடு செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் ‘சந்தைப் பொருளாதார அடிப்படையில்’ இயங்குகிறது. அதாவது ஒவ்வொரு ஒப்பந்தங்களுக்கும் தனித்தனியாகப் பேரம் பேசப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் பிரசவத்துக்குப் பின்பு தாய் நலம் பேணல், ஆயுள் காப்பீட்டு உதவி, தன்னுடைய முழுச் சம்மதத்தை வாடகைத் தாய் வழங்குவது முதலிய எதுவும் அறவே இல்லை.** இதனால் பெற்றோராக விரும்பும் தம்பதியினர், அவர்களுக்கு உதவும் மருத்துவமனைகளின் கை இந்த ஒப்பந்தங்களில் ஓங்கி இருப்பதே நடக்கிறது. இவை வாடகைத் தாய்மார்களுக்குப் பாதகமாகவே அமைகின்றன.”
**இந்தியாவின் இனப்பெருக்கத் துறை தற்போதைய வடிவினில் ஒரு குழம்பிப்போன பால்வீதியை போலக் காட்சியளிக்கிறது…** ஒருபுறம் நாடு முழுக்க இருந்தும், சமயங்களில் வெளிநாடுகளில் இருந்தும் வரும் நோயாளிகள்; மறுபக்கம், கருமுட்டை தானம் செய்யும் இளம்பெண்கள், வாடகைத் தாய்கள், தரகர்களுடன் உலவுகிறார்கள். இந்தியாவின் இனப்பெருக்க மையங்களின் காத்திருப்பு அறைகள் இருக்கிறவர்கள், இல்லாதவர்கள் சந்திக்கும் புள்ளியாக மாறுகின்றன.
**பில்லியன் டாலர் பிசினஸ்**
இனப்பெருக்கத் தொழில்நுட்பம் மலைக்கவைக்கும் அளவு செலவு பிடிப்பது. அரசாங்க தலையீடு இல்லாமல், முழுக்க முழுக்கத் தனியார் மருத்துவமனைகளே இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்துறை பல பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் வழியாக இருப்பதோடு விதிமீறல்கள், ஏற்றத்தாழ்வுகள் மண்டிக்கிடக்கும் துறையாகவும் காட்சியளிக்கிறது.
**இந்தியாவில் நுட்பத்துணை இனப்பெருக்கத் துறையின் மதிப்பானது $478.2 மில்லியனாக 2018இல் இருப்பதாக Allied Market Research அமைப்புச் சொல்கிறது. இதிலிருந்து எட்டே ஆண்டுகளில் 1.45 பில்லியன் டாலராக இவ்வளர்ச்சி பெருகும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த நிலையில், இத்துறையை முறைப்படுத்த முனையும் எந்தச் சட்டமும் சுரண்டப்படுபவர்களின் நலன்களை உள்ளடக்கியதாக, சுரண்டலை தடுப்பதாக அமைய வேண்டும்.**
நுட்பத்துணை இனப்பெருக்க முறைகளில் ஆகும் செலவு ஒன்றரை லட்சத்தில் இருந்து இருபது லட்சம் வரை நீள்கிறது. இதில் கிடைக்கும் வெற்றியின் சாத்தியமானது வெகு குறைவானது என்பதால், பல முறை சிகிச்சை சக்கரத்தில் சிக்கிக்கொண்டவர்களின் செலவு எகிறிக்கொண்டே இருக்கும்.
**தங்களுக்குத் திருமணம் ஆகி 22 ஆண்டுகளாகக் குழந்தை இல்லை என்கிற நிலையில் குணசேகரன் தம்பதியினர் இரண்டாண்டுகளில் பிள்ளைப்பேறின்மை சிகிச்சையில் 16 லட்சம் செலவிட்டிருக்கிறார்கள்.** கட்டடம் கட்டும் கூலித் தொழிலாளியான இவர் பலரிடம் கடன் பெற்றும், தங்கத்தை அடமானம் வைத்தும் பணம் திரட்டினார். குறைப்பிரசவத்தில் பிறந்து அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் பச்சிளம் குழந்தையைக் காப்பதற்காக திரள் நிதி திரட்ட நாடினார்கள். கையில் நிரந்தர வேலையுமில்லாமல், சிகிச்சைக்கு என்று எக்கச்சக்கமாகச் செலவு செய்துவிட்டு குணசேகரன் நிற்கிறார். எப்படித் தன்னுடைய குழந்தையை நன்றாக வளர்ப்பது என்று திக்குத்தெரியாமல் தவிக்கிறார்.
இத்தகைய பிள்ளைப்பேறு கிட்டாதவர்களுக்கு உதவும் நுட்பத்துணை தொழில்நுட்பங்களை அரசு மருத்துவமனைகள் வழங்கினால் அது பல தரப்பினரையும் உள்ளடக்கிய ஒன்றாக, எண்ணற்ற மக்களுக்குப் பயனளிக்கும் ஒன்றாக இருக்கும் என்று மருத்துவர் பரீக்ஷித் ஒப்புக்கொள்கிறார்.
“இத்தகைய பிள்ளைப்பேற்றுக்கு உதவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஏராளமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், போதுமான பணமில்லாததால் மக்கள் பரிதவிக்கிறார்கள். இத்துறையில் ஏற்றத்தாழ்வுகள் பெரும் பங்காற்றுகின்றன. மருத்துவமனைகளில் செல்வசெழிப்பு மிக்கப் பணக்காரர்கள், கொடும் வறுமையில் உழலும் ஏழைகள் என்று எல்லாத் தரப்பு மக்களையும் காண்போம். துரதிர்ஷ்டவசமாக, ஏழைகள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்த இயலாது என்பது முகத்தில் அறையும் உண்மை” என்று சொல்கிறார் பரீக்ஷித்.
ஆனந்தில் உள்ள வாடகைத் தாய்களுக்கான விடுதியில் மதிய வேளை பயிற்சி வகுப்புத் தொடங்கியிருந்தது. முந்தைய அணிகலன்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்பில் கற்றுக்கொண்டதை வைத்து, தான் அழகுற அமைத்திருந்த நீலக்கடல் வண்ண காதணியை 28 வயதாகும் வாடகைத் தாய் காட்டிக்கொண்டிருந்தார்.
தக்ஷாவின் கவனம் வகுப்பில் இல்லை. அவர் வாடகைத் தாய் முறை குறித்துத் தொடர்ந்து பேச விரும்புகிறார். இப்படி அவர் மனம்விட்டுப் பேசுகையில் வெகு இயல்பாக வாடகைத் தாய்மையை வர்த்தகமாக்குவதைத் தடை செய்வதைச் சுற்றி நிகழும் சிக்கலான விவாதங்களை எளிமையாக, செறிவாக விளக்குகிறார். இந்த வாடகைத் தாய் முறையோடு பின்னிப் பிணைந்துள்ள தேவை – விநியோக சங்கிலி குறித்தும், சமூகத்தில் நிலவி வரும் பெரும் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்ய வேண்டிய தேவைகள் குறித்தும் சரளமாக அளவளாவுகிறார்.
**“நான் என் தங்கச்சிக்கு வாடகைத் தாயா காசு வாங்காம இருக்க ஒத்துப்பேனா” என்று கேள்வி எழுப்பிவிட்டு தானே “கண்டிப்பா மாட்டேன்”** என்று பதில் தருகிறார்.
“நாங்க ரெண்டு பேரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடந்துக்கிறோம்னு ஒரு பேச்சுக்கு வெச்சுப்போம், யார் இந்த வைத்தியத்துக்குக் காசு தருவா” என்று கேட்கிறார். அதே துல்லியத்தோடு, “இப்ப மாதிரி பணக்காரங்க, ஏழைங்கன்னு இருந்தாதான் வண்டி ஓடும். யார்கிட்டே காசு இல்லையோ அவங்க வாடகை அம்மாவாகிறாங்க. காசு இருக்கறவங்க குழந்தையை வாங்கிக்கிறாங்க. ரெண்டு பேருக்கும் ஏதாவது கிடைக்கணும். அப்பத்தான் இது தாங்கும். ரெண்டு பேருமே பணக்காரங்க இல்லனா ரெண்டு பேரும் ஏழைன்னா ஒண்ணும் தேறாது” என்கிறார் தக்ஷா. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
**கரு முட்டைகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் தமிழ்நாட்டுப் பெண்களின் கதைகள் கவலையையும் கோபத்தையும் வரவைப்பவை**
**தொடர்ச்சி நாளைய பதிப்பில்**
**கட்டுரையாளர் குறிப்பு**
இந்தச் செய்திக்கட்டுரை தாக்கூர் அறக்கட்டளையின் நிதியுதவியோடு எழுதப்பட்டது. தற்சார்புள்ள இதழியலாளரான தரணி தங்கவேலு, பொதுச் சுகாதாரம் சார்ந்த புலனாய்வு இதழியலுக்கான தாக்கூர் அறக்கட்டளையின் நல்கையினை 2019இல் பெற்றவர்.
[பகுதி1](https://minnambalam.com/public/2020/08/18/8/surrogacy-mothers-india-why-what-the-act-says)�,”