திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 250 ரூபாய், 100 ரூபாய், 20 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
அதன்படி, தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்களின் நலன் கருதி 250 ரூபாய் மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனங்களில் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை கூறுகையில், “உயர் நீதிமன்ற உத்தரவின்படி திருச்செந்தூர் திருக்கோயிலில் இந்து சமய ஆணையர் சில நிபந்தனைகளை உத்தரவாகப் பிறப்பித்துள்ளார்.
இனி ரூ.100 கட்டணம் மற்றும் பொது தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும். இரு வரிசையில் வரும் பக்தர்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே இடத்தில் இருந்து மூலவரை தரிசனம் செய்யும் வகையில் மாற்றப்பட உள்ளது. இந்த தரிசன முறை இன்று (மார்ச் 9) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கோயிலில் திரிசுதந்திரர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பல நிபந்தனைகளுடன் கூடிய உரிமைகளை வழங்கும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோயிலில் 125 ஆயுத படைக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 60 பேர் ஈடுபட உள்ளனர்.
பக்தர்கள் எவ்வித சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு மாற்றங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளது. விஐபி தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. கோயிலில் கைங்கரியம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயர்களைக் கோயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்துக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை இன்று (மார்ச் 9) முதல் 15 நாட்கள் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**
திருச்செந்தூர் கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனம் ரத்து!
+1
+1
+1
+1
+1
+1
+1