கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கல்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது குரும்பலூர் கிராமம். இந்த கிராமத்திற்கு கடந்த 2006-ஆம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இப்பள்ளியில் சுமார் 30 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி ஓராசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகும். இந்த பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு கிடைத்திட சுமார் 15 ஆண்டுகளாக, இந்த கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் கல்வி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குரும்பலூர் அரசு பள்ளிக்கு குரும்பலூர், தடுத்தான் பாளையம், ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். இந்த மாணவர்கள் மதியம் சாப்பிட வீட்டுக்கு சென்றால் மீண்டும் பள்ளிக்கு வருவது மிகவும் கடினம். ஏனென்றால் இந்த மலைகிராம மக்கள் அதி காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புகிறார்கள்.
இதனாலும் இந்த மாணவர்களுக்கு சரிவர மதிய உணவு கிடைப்பதில்லை என்று கூட சொல்லலாம். இதை உணர்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் கப்ரியல் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது சொந்த செலவில் மதிய உணவு வழங்கி வருகிறார்.
இதனைப் போன்று கல்வராயன் மலைப் பகுதியில் இருக்கும் பல தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சரிவர வழங்கப்படுவதில்லை. மேலும் இப்பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை வசதியும் இல்லை. விளையாட்டு மைதானங்களும் இல்லை. விளையாட்டுப் பொருட்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளில் கல்விக் கண் திறந்த காமராஜர் ஏழை எளிய மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் ஆனால் காமராஜரின் கனவு திட்டமான மதிய உணவு திட்டம் இன்னும் சில மலை கிராமங்களில் இந்தத் திட்டம் நடைமுறையில் இல்லை என்பது மிக வருத்தத்திற்குரிய விஷயம் தான்.
.