தமிழ் சினிமாவில், சமீப காலங்களாக விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்த திரைப்படங்களும், லிப்ரா ரவிச்சந்திரன் தமிழ்நாடு உரிமை வாங்குகின்ற படங்களும் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளிவருவதற்கு தடுமாறுகின்றன. சங்கத்தமிழன் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை லிப்ரா ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட சங்கத்தமிழன் படத்தின் மீது பிரச்னைகள் இருப்பது தெரிந்தும், அதனைப் பேசி முடிப்பதற்கு போதுமான கால அவகாசம் இருந்தும் தயாரிப்பு நிறுவனமும், விநியோக நிறுவனமும் அதனைச் செய்யவில்லை. அதன் காரணமாகவே தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதியின் படம் இன்றும் ரிலீசாகாமல் உள்ளது. இதனால் இந்தப் படத்தை வெளியிட இருந்த திரையரங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. படம் வெளியாவதில் என்ன சிக்கல் என்று சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன.
விஜயா வாகினி நிறுவனத்தின் தயாரிப்பில் 2014ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியான வீரம் திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே வியாபாரம் பேசி முடிக்கப்பட்டது. பொதுவாக தணிக்கைத் துறையில் இருந்து ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டால் நேரடித் தமிழ் படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும்.
வீரம் படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைக்காததால் அதற்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை. எனவே, ஏற்கனவே வியாபாரம் பேசி முடிக்கப்பட்ட விலையில் முழுமையாக பணம் செலுத்திய விநியோகஸ்தர்களுக்கு வரித்தொகையை விஜயா வாகினி நிறுவனம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டது. மேலும், முழுமையாக பணம் செலுத்தாத விநியோகஸ்தர்கள் வரித் தொகைக்கு உரிய குறிப்பிட்ட சதவீத பணத்தைக் கழித்துக்கொண்டு மீதியை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
வீரம் திரைப்படம் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டது. அதே போன்று விஜய் நடித்த பைரவா திரைப்படத்தை 2017 ஜனவரி 12 அன்று விஜயா வாகினி நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. அப்போது வீரம் படத்தின் சேலம் ஏரியா விநியோக உரிமையை வாங்கியிருந்த 7G சிவா புகார் அளித்தார். ஆனால் வீரம் திரைப்படத்தை மினிமம் கேரண்டி அடிப்படையில் வாங்கி இருந்ததால் அந்த புகார் செல்லுபடியாகாது என்று திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்டது. அதனால் பைரவா படம் எந்த விதமான பிரச்சனையும் இன்றி ரிலீஸ் ஆனது.
வீரம், பைரவா படங்கள் தயாரிக்கப்பட்ட போது வெங்கட்ராம ரெட்டி தயாரிப்பாளராகவும், நிர்வாகத் தயாரிப்பாளராக தென்காசி ரவிச்சந்திரனும் இருந்தனர். வெங்கட்ராமரெட்டி இறந்து விட்டார். நிர்வாகத் தயாரிப்பாளர் தென்காசி ரவி தற்போது அந்த நிறுவனத்தில் பொறுப்பில் இல்லை. இதனால் வீரம் படம் ரிலீஸ் செய்யப்பட்டபோது கேளிக்கை வரி சம்பந்தமாக எந்த அடிப்படையில் பேசி முடிக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் தெரியவில்லை.
பொதுவாக முந்தையப் படத்தில் விநியோகஸ்தர்களுக்கு பாக்கி எதுவும் இருந்தால் அந்த நிறுவனம் அடுத்த படத்தை வெளியிடும் காலத்தில் பாக்கியை வசூலிக்க பாதிக்கப்பட்டவர்கள் சங்கங்களில் புகார் கொடுப்பது வழக்கம். பைரவா படம் வெளியான போது, வீரம் படத்தின் பிரச்னை மற்றும் ஒப்பந்தத்திற்கு எதிராகப் பேச முடியாது என்று தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூறியது. ஆனால் தற்போது ‘சென்னை-செங்கல்பட்டு ஏரியாவில் வீரம் திரைப்படத்தை ரிலீஸ் செய்த தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே சங்கத்தமிழன் படத்தை வெளியிட அனுமதிக்க முடியும்’என்று அதன் நிர்வாகிகளில் ஒருவரான அருள்பதி நிபந்தனை விதித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் தரப்பில், ‘வீரம் படம் சம்பந்தமான பாக்கித்தொகை வேண்டும் என்று கூறி கேட்பவர்களுக்கு பணம் தர முடியாது. அப்படியே கொடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பு எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தால் அதனை சட்ட ரீதியாக சந்திப்பதற்கு தாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று கூறிவிட்டனர். தேவைப்பட்டால் இது விஷயமாக மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடப்போவதாகவும் கூறியுள்ளனர்.
தற்போதைய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜயா வாகினி நிறுவன உரிமையாளர்களின் குடும்ப நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. லிப்ரா ரவிச்சந்திரன், சங்கத் தமிழன் படத்தின் தமிழக உரிமை 10.50 கோடி ரூபாய் என்று ஒப்பந்தம் கையெழுத்தான அன்று 3 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் நேற்றைய தினம் மீண்டும் மூன்று கோடி ரூபாயை விஜயா வாகினி நிறுவனத்திற்குக் கொடுப்பதற்கு வந்துள்ளார். ஆனால் ஒப்பந்தப் பிரகாரம் உள்ள மொத்த பணத்தையும் செலுத்தினால் மட்டுமே சங்கத்தமிழன் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தமிழன் படத்தைப் பொறுத்தவரை ரவிச்சந்திரன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முழு தொகையும் உரிய காலத்தில் செலுத்தத் தவறியதால் சங்கத்தமிழன் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இன்று பிற்பகலுக்கு முன் முழு பணத்தையும் செலுத்தி விடுவதாக உறுதி கொடுத்திருப்பதாகவும், அதனால் மதியக் காட்சியிலிருந்து சங்கத் தமிழன் திரையரங்குகளில் திரையிடப்படும் எனவும் கூறுகின்றனர்.
பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று முறையிடக் கூடிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல் தமிழக அரசு நியமித்த தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் அது உள்ளது. அதே போன்று, தான் நாயகனாக நடித்த படம் திட்டமிட்டபடி வெளிவருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்குமாறு விஜய் சேதுபதி முறையிடுவதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல் அது தமிழக அரசால் முடக்கி வைக்கப்பட்டு தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சினிமாவைப் பொறுத்தவரை காலங்காலமாக சங்கங்களின் முடிவு சர்வ வல்லமை பொருந்தியவையாக இருந்து வருகிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத காரணத்தால் சங்கத்தமிழன் தயாரிப்பாளர் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆசிய கண்டத்திலேயே அதிக பரப்பளவில் படப்பிடிப்புத் தளத்தை நிர்மாணித்த நிறுவனம் விஜயா வாகினி ஸ்டூடியோ. எம்ஜிஆர், ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற நடிகர்கள் நடித்த படங்களைத் தயாரித்த பாரம்பரியமிக்க நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சங்கத்தமிழன், திட்டமிட்டபடி வெளிவராமல் போனது அந்த நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிற்கும் அவமானகரமானது.
லிப்ரா ரவிச்சந்திரன் போன்ற ஒருவருக்கு, அவருடைய கடந்த கால சினிமா, வியாபாரம், வினியோகம் போன்ற விபரங்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் படத்தின் தமிழக உரிமையை கொடுத்தது விஜயா வாகினியின் நிர்வாகத் தவறு எனக் கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவின் எல்லா பிரச்னைகளையும் பேசித் தீர்க்க வேண்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடக்கப்பட்டு இருப்பதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இதுபோன்ற பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரண்டிற்கும் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டநிர்வாகம் உடனடியாக தேவை என்கின்றனர் மூத்த தயாரிப்பாளர்கள்.
-ராமானுஜம்�,”