பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்கலாம் என்றும் அதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
மும்பை வர்த்தக சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், “பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசும், மாநில அரசுகளும் நிலையான வரிகளை விதித்து வருகின்றன. எனவே, அந்த வரிகளைக் குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம்.
மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் தொடர்பான நிர்பந்தம் இருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து நாட்டையும், மக்களையும் விடுவிக்க இந்த அரசுகள் பெரும் பணத்தை செலவிட வேண்டியிருக்கிறது.
எனவே, வருவாய் தேவையும் அரசுகளுக்கு இருக்கும் நிர்பந்தமும் நன்றாக புரிகிறது. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உற்பத்தி செலவிலும், தயாரிப்பு செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், “ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த உள்ளது. இதுதொடர்பான பணிகள் உள்மட்ட அளவில் நடந்து வருகின்றன. விரைவில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும், அறிக்கைகளும் வெளியிடப்படும். நாட்டின் நிதித்துறை, முன்பு இருந்ததைவிட தற்போது சிறப்பான இடத்திலேயே உள்ளது. வாராக்கடன்கள் விஷயத்தில் வங்கிகள் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றன. தனியார் வங்கிகளும், பொதுத்துறை வங்கிகளும் கடன் மதிப்பீட்டு நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
**-ராஜ்**�,