வாக்களிக்க பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்காக மக்களிடம் பணம் பட்டுவாடா நடப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சூரியபகவான் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் வாக்களிக்க வரும் மக்களிடம், ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என சத்தியம் வாங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்தியம் வாங்க உத்தரவிட முடியாது, அது சாத்தியமுமில்லை. மேலும், இது நீதிமன்றத்தின் பணி கிடையாது என தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து அரசை அணுக அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
ஓட்டுக்கு பணம் வாங்குவதை மக்கள் நிறுத்திவிட்டால், சமுதாயத்தை பிடித்திருக்கும் பிணி நீங்கி விடும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
�,