நாடு முழுவதும் உள்ள நித்யானந்தாவின் சொத்து விவரங்களின் பட்டியலை தயார் செய்து 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய ராம்நகர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை, கடத்தல், பணம் பறித்தல் என பல சர்ச்சைகளுக்கு ஆளான நித்யானந்தா தற்போது தலைமறைவாக இருக்கிறார். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அவரது பக்தர்கள் நன்கொடை வழங்கியதால் அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன. இந்நிலையில் அவரது சொத்துகள் குறித்த பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நித்தியின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன், தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குன்ஹா, நித்தியின் ஜாமீனை ரத்து செய்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி இதுதொடர்பான விசாரணை நடைபெற்ற போது நித்திக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை ராம்நகர நீதிமன்றம் உறுதி செய்தது.
இதனிடையே லெனின் கருப்பன் உச்ச நீதிமன்றத்தில், தன் மீது ராம்நகர நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டுக்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இதனை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் நித்யானந்தா விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதி செய்ய வேண்டும், நித்தி ஆஜராவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று (மார்ச் 4) ராம்நகர மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்தலிங்க பிரபு முன்பு நித்திக்கு எதிரான பாலியல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல விசாரணைகளுக்கு நேரில் ஆஜராகாத நித்யானந்தா, அவரது மேலாளர் என நித்தி தரப்புக்கு இனியும் விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி பிடதி ஆசிரமம் உட்பட நாடு முழுவதும் அவருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களை சேகரித்து பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கர்நாடக சிஐடி போலீஸுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு மார்ச் 23ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் நித்தி நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நித்தியின் சொத்துகளை முடக்க ராம்நகர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வீடியோ ஒன்றில் பேசிய நித்தி, எனது மரணத்திற்குப் பிறகு எனது சொத்துகள் அனைத்தும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களின் குரு பரம்பரைகளுக்குச் சென்று சேரும் வகையில் உயில் எழுதி வைத்துள்ளேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**கவிபிரியா**�,