�சிறப்புக் கட்டுரை: குடிகள் ஆவதற்கு முன்பே இந்தியர்கள் வாக்காளர்கள் ஆன வரலாறு!

Published On:

| By Balaji

நா. ரகுநாத்

**மக்களாட்சியின் வரலாற்றில் ஒரு புரட்சி**

‘மக்களாட்சியின் வரலாற்றில் இந்திய ஜனநாயகம் ஒரு விதிவிலக்கு, அதனால் அதன் செயல்பாட்டை நுணுக்கமாகத் தெரிந்து கொள்வதன்மூலம் ஜனநாயகம் பற்றிய புரிதலை வளப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு’ என்ற கருத்து பல காலமாகவே அறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது. இது அடிப்படையற்ற கருத்து அல்ல. இந்தியா மக்களாட்சி முறையைத் தேர்ந்தெடுத்தபோது, அந்த முறையைத் தழுவுவதற்கு ஒரு சமுதாயம் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளாக அரசியல் அறிவியல் அறிஞர்கள் (Political Scientists) பட்டியலிட்டிருந்த எந்தவொரு தகுதியையும் இந்தியா பெற்றிருக்கவில்லை என்பதே அதற்குக் காரணம்.

இன்று உலகின் முன்னேறிய பொருளாதாரங்களாக விளங்கும் பல நாடுகள், பொருளாதார வளர்ச்சியும், மக்களின் கல்வியறிவும் ஒரு குறிப்பிட்ட (உயர்)நிலையை அடைந்த பின்புதான் ஜனநாயக ஆட்சிமுறையைத் தழுவின. அந்த நாடுகளில் வாக்குரிமை முதலில் சொத்து வைத்திருப்பவர்களுக்கும் கல்வி பெற்றவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட்டது; அடுத்து உழைக்கும் ஆண்களுக்கு அது நீட்டிக்கப்பட்டது; பெண்கள், சிறுபான்மையினர் வாக்குரிமை பெற பல போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. ஆக, எடுத்த எடுப்பிலேயே வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் தரப்படவில்லை.

இந்தப் போக்கைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டது சுதந்திரத்துக்குப் பின் இந்தியா தேர்ந்தெடுத்த பாதை. இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் சராசரியாக ஆண்டுக்கு ஒரு விழுக்காடு பொருளாதார வளர்ச்சிகூட அடையாத பின்தங்கிய, ஏழை நாடாக சுதந்திரம் பெற்ற இந்தியா, தனது வளர்ச்சிப் பயணத்தின் முதல் கட்டத்திலேயே ஜனநாயக ஆட்சிமுறையை அமைத்து, வயது வந்த அனைவருக்கும் (21 வயது) வாக்குரிமையை வழங்கியது மாபெரும் ஜனநாயகப் புரட்சி.

இந்தியாவில் மக்களாட்சி முறை எப்படி நிறுவப்பட்டது, நிறுவனப்படுத்தப்பட்டது? அது அறிவுஜீவிகளாலும், அரசியல் தலைவர்களாலும் எதேச்சையாக முடிவு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டதா? இல்லை, மக்களாட்சியை உருவாக்குவதில் படிப்பறிவில்லாத, ஏழை எளிய மக்களும் ஆர்வத்தோடு பங்கேற்றார்களா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நாம் இஸ்ரேல் நாட்டைச்சேர்ந்த பெண் அரசியல் அறிவியல் அறிஞரான ஒர்னித் ஷாநி எழுதியுள்ள “How India Became Democratic: Citizenship and the Making of the Universal Franchise” எனும் புத்தகத்தில் பெற முடியும். ‘சுதந்திர இந்தியாவின் முதல் ஜனநாயகத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைத் (electoral roll/voter list) தயாரிக்கும் முயற்சியில்தான் இந்தியாவில் மக்களாட்சி நிறுவனப்படுத்தப்பட்டது. குடிமக்கள் ஆவதற்கு முன்பே இந்தியர்கள் வாக்காளர்கள் ஆகி விட்டனர்’ எனும் சுவாரஸ்யமான வாதத்தை இந்தப் புத்தகத்தில் ஆணித்தரமாக நிறுவியுள்ளார் ஒர்னித் ஷாநி.

**ஓர் இமாலய முயற்சி**

வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை (Universal Adult Franchise) எனும் கோட்பாட்டின் அடிப்படையில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் பட்டியலின் வரைவைத் (draft electoral roll) தயார்செய்யும் பணிகள் நவம்பர் 1947இல் தொடங்கின. அரசமைப்புச் சட்ட சபையின் செயலகத்தில் (Constituent Assembly Secretariat – CAS) இருந்த சில அதிகாரிகள் இந்தப் பணியைத் தொடக்கினார். மதத்தின் அடிப்படையில் ஏற்பட்ட இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை, லட்சக்கணக்கான அகதிகளின் வருகை, மற்றும் 552 சுதேச சமஸ்தானங்கள் (princely states) இந்தியாவுடன் இன்னும் இணைக்கப்படாத பின்னணியில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே, இந்தியர்கள் இந்நாட்டுக் குடிகள் ஆவதற்கு முன்பே, அவர்களை சமமான வாக்குரிமை கொண்ட வாக்காளர்களாக மாற்றும் மாபெரும் முயற்சி, பல தடைகளைக் கண்டது. வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச்சென்ற ஒன்றல்ல; நம்முடைய கூட்டுமுயற்சியால் மக்களாட்சியின் எல்லைகளை நாம் விரிவுபடுத்தினோம் என்பதே உண்மை.

வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது இந்தியாவில் சாத்தியமேயில்லை என்பது ஆங்கிலேயர்கள் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்திய அரசு சட்டம் 1935, வயது வந்தோர்களில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கியது. மதத்தின் அடிப்படையில் தனித்தனி வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. பெண் வாக்காளர்களுக்கு தனிநபர் என்ற அடையாளம் வழங்கப்படவில்லை; இன்னாருடைய மகள் அல்லது இன்னாருடைய மனைவி என்றே அவர்கள் பதிவு செய்யப்பட்டனர்.

மக்களைத் தரம் பிரிக்காமல், வயது வந்த எவரையும் விலக்காமல், பெண் வாக்காளர்களின் தனிநபர் அடையாளத்தை அழிக்காமல், அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும் என்றால் அன்றிருந்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு மக்களை உள்ளடக்கிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டியிருந்தது. வெறும் 3 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17.3 கோடியானது. அவர்களில் 85 விழுக்காட்டினர் அதுவரை தேர்தலில் வாக்களித்ததேயில்லை; 50 விழுக்காட்டினரான பெண் வாக்காளர்கள் தங்களை தனிநபர்களாகவே கருதவில்லை. அதுபோன்றவொரு முயற்சி அதுவரை உலகின் எந்த நாடுமே மேற்கொண்டதில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

பல்வேறு வேறுபாடுகள் கொண்ட இந்த சமுதாயம், ஒன்றுபட்ட ஒரு தேசமாக, மக்களாட்சியாக இருக்கவே முடியாது என்றே பலரும் கருதினர். ஆனால் இத்தனை வேறுபாடுகளைக் கொண்ட சமுதாயத்துக்கு வேறெந்த ஆட்சிமுறையும் பொருந்தி இருக்காது. வேறுபாடுகளைப் பன்முகத்தன்மையாக மாற்றி, அதுவே இந்நாட்டின் அடித்தளம் என்று முடிவு செய்து, ஒரு முற்போக்கான சமுதாயத்தை உருவாக்கத் தேவையான விழுமியங்களை அரசியல் சாசனத்தில் நாம் நிறுவனப்படுத்தினோம். அந்த விழுமியங்களைத் தோண்டிப் புதைப்பதற்கான ஏற்பாடுகள் மிகத்தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், அந்த வரலாற்றை நமக்கு நாமே நினைவுபடுத்திக்கொள்வது அவசியம்.

**இந்தியர்கள் வாக்காளர்கள் ஆன கதை**

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 1951 அக்டோபர் 25 – 1952 பிப்ரவரி 21 காலத்தில் நடத்தப்பட்டது. ஆனால், அந்தத் தேர்தலுக்கான சவால்கள் நிறைந்த ஆயத்தப் பணிகள், குறிப்பாக வயது வந்த அனைவரையும் உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள், நவம்பர் 1947-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டன. 1950 மார்ச் மாதம் தேர்தல் பணிகள் மேற்கொள்ளும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு முந்தைய இரண்டரை ஆண்டுகள் அவற்றை அர்ப்பணிப்போடும், கவனத்தோடும் செய்தது, அரசமைப்புச் சட்ட ஆலோசகர் பி.என்.ராவ் தலைமையில் இயங்கிய ஒரு தற்காலிக அதிகாரிகளின் குழு. அதுவே அரசமைப்புச் சட்ட சபையின் செயலகம். அந்தக் குழு இந்தியாவின் முதல் வாக்காளர் பட்டியலின் வரைவைத் தயாரித்த கதை, இந்திய மக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட கதை; இந்தியாவில் மக்களாட்சி நிறுவனப்படுத்தப்பட்ட கதை.

தேர்தல் பணிகள் அனைத்தும் அரசியல் சாசனம் 1950 ஜனவரியில் அமலுக்கு வரும் முன்பே 1947-1949 காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் சாசனம் நடைமுறைக்கு வரும்போது இந்தியாவின் முதல் வாக்காளர் பட்டியலின் வரைவு தயாராக இருந்தது. அப்படியென்றால், நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு முன்பே இந்தியர்கள் வாக்காளர்கள் ஆகிவிட்டார்களா எனும் கேள்வி எழுகிறது. ‘ஆம்’ என்பதே அதற்கான பதில்.

அரசமைப்புச் சட்டத்தின் வரைவு 1948 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. குடியுரிமை பற்றி அந்த வரைவில் தற்காலிகமாக எழுதப்பட்டிருந்த ஏற்பாடுகளின் அடிப்படையில்தான் வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதென்று முடிவு செய்யப்பட்டது. காரணம், வாக்காளராக இருப்பதற்கு ஒருவர் இந்நாட்டுக் குடியாக, இந்தியராக இருக்க வேண்டும் என்பதே. இந்நாட்டுக் குடியாகத் தகுதி பெறுவதற்கு ஒருவர் என்னென்ன செய்ய வேண்டும் என்று அந்த வரைவில் இருந்தது. குடியுரிமை பெற ஒருவர் இங்கு குடியிருப்பவராக இருக்க வேண்டும் என்னும் சரத்து இருந்தது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது இடம்பெயர்ந்து வந்தவர்கள் ஏராளமானோர் இருந்ததால், அகதிகளாக இருக்கும் அவர்களும் குடியுரிமை பெறுவதை அனுமதிக்கும் எளிமையான ஏற்பாடு ஒன்று இருந்தது: ‘இந்தியாவிலேயே தங்குவதற்கு தங்கள் விருப்பத்தை அவர்கள் தங்கியிருக்கும் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் முப்பது நாட்களாவது இந்தியாவில் அவர்கள் தங்கியிருக்க வேண்டும். ஆனால், அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகுதான் அவர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க முடியும்’ என்ற வரைவுச் சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தது.

இது, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியது. வாக்காளராகத் தகுதிபெற ஒருவர், 21 வயதை அடைந்தவராக இருக்க வேண்டும்; இந்தியராக இருக்க வேண்டும் மற்றும் எங்கு வாக்காளராகப் பதிவு செய்யப்படுகிறாரோ அந்த இடத்தில், 1948 மார்ச் 31, முடிவில் 180 நாட்களாவது தங்கியிருக்க வேண்டும். ஆனால், அகதிகள் அந்த நேரத்தில் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை. மேலும், 180 நாட்கள் என்று வரையறுக்கும் பட்சத்தில் ஏராளமான அகதிகள் விடுபட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.

**சிக்கலான கேள்விகளும், சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுகளும்**

1948 மார்ச் மாதம் வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கான ஆணைகளும் வழிமுறைகளும் அரசமைப்புச் சட்ட செயலகத்தால் அன்றிருந்த மாகாண/மாநில அரசாங்கங்களுக்கு அனுப்பப்பட்டது. சில நாட்களிலேயே கேள்விகள் நிறைந்த கடிதங்கள் வந்து குவிந்தன. ‘இந்தியர் என்பவர் யார்? அகதி என்பவர் யார்? அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க முடியுமா? குடியுரிமை வழங்காமல் வாக்காளர் பட்டியலில் ஒருவரை எப்படிச் சேர்ப்பது?’ போன்ற பல சிக்கலான கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அரசமைப்புச் சட்ட செயலகம் தேடத் தொடங்கியது. 180 நாட்கள் எனும் வரையறை அகதிகளை நிச்சயம் பாதிக்கும். எனவே, அவர்களுக்கு சில சலுகைகள் வழங்க வேண்டும் என்பதைச் செயலகம் ஒப்புக்கொண்டது. மேலும், இந்தப் பிரச்சினை அனைத்திந்திய அளவில் சரிசெய்யப்பட வேண்டும் என்பதையும் அது அங்கீகரித்தது. அதற்கு முதலில் அகதி யார் என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டுமே! இரண்டு மாதங்கள் இதற்கான தீர்வைத் தேடி, மிகவும் தாராளமான ஒரு வரையறையைத் தீர்மானித்தது. ‘தங்கியிருந்த இடத்தில் உருவான அசாதாரண சூழ்நிலையால் ஒருவர் அங்கிருந்து இடம் மாற்றப்பட்டிருந்தால் அவரை அகதியாகக் கருதலாம்’ என்ற முடிவுக்கு வந்தது அரசமைப்புச் சட்டச் செயலகம். இறுதியாக, ‘அகதியாக இருக்கும் ஒருவர், வாக்காளராகப் பதிவு செய்யும் ஊரிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், அவருடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் குறைந்தபட்சம் 180 நாட்கள் அந்த ஊரில் தங்கியிருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை’ என்று 1948 ஜூலை 13 அன்று செயலகம் தெரிவித்து, ஆணை பிறப்பித்தது.

இவை அனைத்தும் அகதிகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வழிமுறைகள் மட்டுமே; குடியுரிமை வழங்குவதற்கான வழிமுறைகள் அல்ல என்பதும் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால், வரைவு அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள குடியுரிமை குறித்த ஏற்பாடுகள் தற்காலிகமானவை மட்டுமே. அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு அவற்றை நிரந்தரமானதாக ஆக்க முடியாது.

ஆக, குடியுரிமை கோருவதற்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்பதை அறிந்த அகதிகள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றால்தான் அரசியல் சாசனம் அமலுக்கு வரும்போது தங்கள் குடியுரிமையைக் கேட்டுப் பெறமுடியும் என்பதை உணர்ந்தனர். ஏனென்றால், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்க்க, இந்தியாவின் ஓர் ஊரிலேயே தங்குவதற்குத் தங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்களே! இந்தப் புரிதலின் விளைவாக, எக்காரணம் கொண்டும் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டுப் போய்விடக் கூடாது என்ற நோக்கத்தோடு, நாட்டின் பல பகுதிகளில் அகதிகள் ஒன்றுசேர்ந்து எடுத்த முயற்சிகள் என்னென்ன, அவை எந்தளவுக்கு வெற்றிகரமாக இருந்தன என்பதுதான் மீதிக்கதை. அந்த மீதிக்கதையை ஒர்னித் ஷாநியின் புத்தகத்தில் படித்து முடிக்கும்போது, மக்களாட்சி என்பது உண்மையிலேயே மக்களால்தான் உருவாக்கப்பட்டது என்பது புரியும்.

**வரலாற்றை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம்**

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் மதவாதத்தால் கொல்லப்பட்டு, கோடிக்கணக்கான அகதிகள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து இருந்த அந்த சோதனைகள் நிறைந்த காலக்கட்டத்திலும்கூட, அடைக்கலம் தேடிவரும் எவராக இருந்தாலும் எந்தப் பாகுபாடும் இன்றி, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஜனநாயகத்தையே நாம் உருவாக்க முயற்சி செய்தோம்.

இன்று நம் வாக்குகளைப் பெற்று, தனிப்பெரும்பான்மையோடு மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு, ‘நாடு-தழுவிய தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) எனும் கருவியைப் பயன்படுத்தி, இந்நாட்டுக் குடிகள் யார் என்பதை முடிவு செய்வோம்’ என்று சொல்வதற்கான தைரியம் எங்கிருந்து வந்தது? ஜனநாயக முறையில் அமைதியாகத் தங்கள் எதிர்ப்பையும், மாற்றுக்கருத்தையும் தெரிவிப்பவர்கள்மீது வன்முறையையும், அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விடுபவர்களுக்கு நம் குடியுரிமையைச் சோதித்துப் பார்ப்பதற்கு என்ன அறம் உள்ளது? இந்தியர்கள் யார் என்பதை அரசியல் சாசனத்தை மதிக்காதவர்கள் நமக்குச் சொல்லத் தேவையில்லை.

இந்திய மக்கள் இந்நாட்டுக் குடிகள் ஆவதற்கு முன்பே, தங்கள் அரசியல் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தகுதி கொண்ட வாக்காளர்கள் ஆனது, ஒரு மக்களாட்சிப் புரட்சி. அந்தப் புரட்சியால் அரசியல் பயனடைந்தவர்கள் இன்று ஓர் எதிர்ப்புரட்சியைக் கிளப்பிவிட முயற்சி செய்கின்றனர். நம்முடைய ஜனநாயகப் புரட்சிப் பாரம்பரியத்தை மீட்டெடுத்து, அரசியல் சாசனத்தின் விழுமியங்களைக் காக்க வேண்டிய தருணம் இது

** கட்டுரையாளர் குறிப்பு**

நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share