குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக் கோரி முதல்வர் மாவட்டத்தில், நேற்று (மார்ச் 11) ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை உட்பட தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோன்று சேலம் கோட்டை மைதானத்தில் கடந்த 24 நாட்களாக சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகப் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகச் சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாத்திரங்கள், பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்காகப் போராட்டக்காரர்கள் கோட்டை பகுதியிலிருந்து ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். போராட்டத்தின் காரணமாக அனைத்து சாலைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. முந்நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டது.
இதனிடையே ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே நுழைய முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனவே ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாசகங்கள் எழுதிய உருவத்தை பாடைகட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 1,110 பேரை போலீஸார் கைது செய்து நேரு கலையரங்கில் காவலில் வைத்தனர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக நேற்று பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நெரிசலில் சிக்கித் தவித்தது. வாகனங்களை மாற்று வழியில் இயக்க போலீஸார் ஏற்பாடு செய்தனர்.�,”