திருச்சியில் விசாரணையைத் தொடங்கியது சிபிசிஐடி!

Published On:

| By Balaji

திருச்சியில் காவலர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு ஓட்டுக்காக கவரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக மாநகர காவல் ஆணையருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆணையர் லோகநாதன், மேற்கு தொகுதிக்குட்பட்ட தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டி புதூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பணத்துடன் கூடிய கவர்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தியதையடுத்து, தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ரைட்டர் சுகந்தி, அரசு மருத்துவமனை சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லாமேரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, நுண்ணறிவுபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரன், கலியமூர்த்தி ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார். 8 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களை ஒட்டுமொத்தமாகப் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் மீது மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைச் சேகரித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு குழு திருச்சிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கும்,தனக்கும் சம்பந்தம் இல்லை என்று [கே.என்.நேரு](https://minnambalam.com/public/2021/03/28/33/investigate-a-complaint-that-police-paid-for-a-postage-vote.) சொன்னாலும், திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாபன், பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக திமுக வேட்பாளர் கே.என்.நேருவை கைது செய்ய வேண்டும் என ஆர்டிஓ பழனிகுமாரைச் சந்தித்து மனு அளித்தார்.

இந்த நிலையில், அதிமுக தன் மீது வீண்பழி போடுவதாகவும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் குறுக்கு வழியில் வெற்றி பெற அதிமுக முயற்சி செய்வதாகவும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share