zதிங்கள் முதல் காணொலி விசாரணை நிறுத்தப்படும்!

Published On:

| By admin

சென்னை உயர் நீதிமன்றத்தில், மார்ச் 7ஆம் தேதி முதல் காணொலி காட்சி விசாரணையை நிறுத்த உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. தற்போது தினசரி தொற்று பாதிப்பு 500க்கு கீழ் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன் வைத்த வாதங்களை கேட்க முடியாத வகையில் இடையூறு ஏற்பட்டதாக அரசுத்தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள தொடர்பு உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்வதாக சக நீதிபதிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
அதனால், திங்கள்(மார்ச் 7) கிழமை முதல் காணொலி காட்சி விசாரணை முறை நிறுத்தப்படவுள்ளது. காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி காட்சி மூலம் வாதிட அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.

இதுசம்பந்தமாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் விளக்கமளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share