உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக 6 புதிய மனுக்கள்!

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வரும் டிசம்பர் 2ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 20ஆம் தேதி [டிஜிட்டல் திண்ணையில்](https://minnambalam.com/k/2019/11/20/17/localbody-elections-dmk-%20new-move-to-stay), “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பொங்கல் பணமும் பொங்கல் பரிசும் அறிவிக்கப்படும். அந்தப் பரிசுத் தொகையை அந்தந்த உள்ளாட்சி அதிமுக வேட்பாளர்கள் மூலம் ரேஷன் கடைகள் வழியாக வழங்க வைத்து அரசு பணத்தை தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்துவதுதான் அதிமுகவின் உத்தி. இப்போதே பண வியூகம் உட்பட பல்வேறு வியூகங்களை அமைக்க தொடங்கிவிட்டனர். இப்படிப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் அது ஆளும்கட்சியினருக்கு ஆதரவான தேர்தலாகவே இருக்கும் என்று கருதுகிறது திமுக.

ஆக, உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், அது திமுகவின் பெயரில் இருக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் இப்போதைய திட்டம். வார்டு மறுவரையறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பொதுநபர்களை வைத்து அனுப்பப்பட்ட மனுக்களையும் தொகுத்து உள்ளாட்சித் தேர்தலை தற்போதைய நிலையில் நடத்தக் கூடாது என்று வாக்காளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படும். இதில் ஆர்.எஸ்.பாரதியோ, திமுக தொடர்பான வேறு யாருமே இருக்க மாட்டார்கள். இதற்கான பணிகள் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டு விட்டன” என்று தெரிவித்திருந்தோம்.

இதுதொடர்பாக [உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த தீவிரம் காட்டும் திமுக!](https://minnambalam.com/k/2019/11/21/109/localbody–elections-dmk-try-to-stop) என்ற தலைப்பில் நாம் வெளியிட்ட மற்றொரு செய்தியில், “மின்னம்பலத்தின் தேடுதலில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்ட வரையறைகள் உட்பட, பெண்கள் ஒதுக்கீடு போன்ற காரணங்களை ஒட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் புகார் மனு நமக்குக் கிடைத்தது. இப்படி அனுப்பப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை என்பது சாத்தியமில்லை என்பதே எதார்த்தம். அதையே அடிப்படையாக வைத்து புகார் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை என்று நீதிமன்றம் செல்வதுதான் திமுகவின் திட்டம்” என்று தெரிவித்திருந்தோம்.

அதன்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

அவர்களின் மனுவில், “புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்தினால் நாங்கள் பாதிக்கப்படுவோம். எனவே, புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை முடித்த பிறகு தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

**திமுக வழக்கு**

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் டிசம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, “தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக அரசு மற்றும் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பணிகளை நிறைவு செய்த பின்னரே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும்” என்று திமுக சார்பில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென இன்று (நவம்பர் 29) உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டனர்.

**ராமதாஸ் எதிர்ப்பு**

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உள்ளாட்சித் தேர்தலைத் தடுக்க மறைமுகமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கண்டிக்கத் தக்கவை. தோல்வி பயம் காரணமாக மேற்கொள்ளப்படும் இந்த சதியாட்டங்களைப் பொருட்படுத்தாமல், உச்சநீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிப்படி உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share