தென்காசியில் தனியார் மினி பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் நிறுத்தத்தில் இறங்குவதற்கு முயற்சித்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரி. கணவரை இழந்த நிலையில், தனது மகள், மகனுடன் வசித்து வந்துள்ளார் மகேஷ்வரி. இந்த நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், அதற்கான பொருட்களை வாங்குவதற்காக கழுகுமலை சென்றிருந்தார். பொருட்களை வாங்கிய பின்னர், கழுகுமலையில் இருந்து திருவேங்கடம் செல்லும் தனியார் மினி பஸ்ஸில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் மகேஷ்வரி. அப்போது தான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக மகேஷ்வரி எழுந்து நின்று தயாரானார்.
அப்போது மினி பஸ் வளைவில் வேகமாக திரும்பியபோது, மகேஷ்வரி கம்பியை பிடித்திருந்த பிடி நழுவி கண் இமைக்கும் நேரத்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்தார். இதனை பார்த்த சக பயணிகள் சத்தம் போட்டதையடுத்து, பஸ் நின்றது.
பலத்த காயத்துடன் சாலையில் கிடந்த மகேஷ்வரியை மீட்டு குருவிகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகேஷ்வரி கீழே விழுந்த காட்சிகள் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகள் பார்ப்போரின் மனதை பதைபதைக்க வைக்கின்றது. வளைவில் வேகமாக பேருந்து இயக்கப்பட்டதால்தான் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் என்பதால் மினி பஸ் ஓட்டுநர் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மினி பஸ்ஸை பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே தந்தையை இழந்த இரண்டு பிள்ளைகளும், தற்போது துணையாக இருந்த தாயையும் இழந்துள்ளதால் ராமலிங்கபுரம் கிராமமே சோகத்தில் உள்ளது.
கிராமப்பகுதிகளில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள், மினி பேருந்துள் மற்ற வாகனங்களை முந்தி செல்ல வேண்டும் என்பதற்காக எப்போதுமே அதிவேகத்தில்தான் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், தனியார் பேருந்துகளில் வேகம் குறைந்தது மாதிரி தெரியவில்லை.
**-வினிதா**
�,