கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கோவையில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பொன் தாரணி என்ற மாணவி கடந்த 11ஆம் தேதி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்துக்கு அவர் படித்த சின்மயா வித்யாலயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை தான் காரணம் என்று தெரியவந்தது.
இதையடுத்து இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் மாணவியின் வீட்டில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப் பள்ளிக் கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
அதுபோன்று பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வரும் நிலையில் கோவை மாணவிக்கு ஏற்பட்டது போன்று மற்ற மாணவிகளுக்கு நடைபெறாமல் தடுக்க வருகிற 23ஆம் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,