நாய்களுக்கு பயந்து ஓடிய காட்டெருமை பலியான பரிதாபம்!

Published On:

| By Balaji

கொடைக்கானலில் காட்டெருமை ஒன்று நாய்களுக்கு பயந்து ஓடி இரும்பு கதவில் சிக்கி பலியான பரிதாபம் நடந்துள்ளது.

கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. அவை அவ்வப்போது உணவு தேடி நகர்ப் பகுதிக்குள் நுழைகின்றன. தற்போது பேரிக்காய் சீசன் தொடங்கியுள்ள நிலையில் நகரை ஒட்டியுள்ள தோட்டங்களுக்குள் காட்டெருமைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. மேலும் அவை கூட்டமாக குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 13) நாயுடுபுரம் பகுதியில் காட்டெருமை ஒன்று தனியாக உலா வந்தது. இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்தபடி அதை துரத்தின. இதனால் அந்தக் காட்டெருமை மிரண்டு ஓட்டம் பிடித்து, அருகில் இருந்த வீட்டின் இரும்பு கதவைத் தாண்ட முயன்றது.

அப்போது, இரும்பு கதவின் மேல் இருந்த ஊசியான கம்பியில் சிக்கி அது உயிருக்குப் போராடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் காட்டெருமை இறந்துவிட்டது.

பின்னர் வனத் துறையினர், இரும்பு கதவில் சிக்கி இறந்த காட்டெருமையின் உடலை கைப்பற்றி வனப்பகுதியில் புதைத்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, கம்பி வேலி மற்றும் வீடுகள் முன்பு இரும்பு கதவு அமைக்கும்போது அதில் ஊசியான கம்பிகளை வைக்கக் கூடாது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share