xகராத்தே பிறந்தநாள்: குவிந்த ரஜினி ரசிகர்கள்!

Published On:

| By Balaji

காங்கிரஸிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் நேற்று தனது பிறந்தநாள் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜனின் பிறந்தநாள் விழா நேற்று (அக்டோபர் 8) அவரது வீட்டில் நடைபெற்றது . மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான திண்டிவனம் ராமமூர்த்தி, நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கராத்தே தியாகராஜனை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், அதிமுக பேச்சாளருமான ராதாரவி, “கராத்தே தியாகராஜன் என்றால் நட்பு என்பதுதான் அர்த்தம். எங்கே இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படமாட்டார். எந்த ஒரு விஷயம் என்றாலும் உடனே ஓடிவந்து உதவுவார். எனது தாயார் மரணம், சரத்குமாரின் அண்ணன் மரணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்துள்ளார்” என்றவர், தனது பேச்சை ரஜினி பக்கம் திருப்பினார்.

“ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால் நான் அவர் பின்னால் நிற்கத் தயார். என்னிடம் சிலர் என்னங்க நீங்க அவர் பின்னாடி நிற்கிறேன்னு சொல்றீங்களே என்று கேட்டார்கள். ஆமாம், ‘ரஜினி பாஜக. அப்புறம் அது அதிமுக கூட்டணிதானே. இது தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்களே’ என்று அவர்களிடம் கூறினேன். ரஜினி தேர்தலில் நின்றால் தொடை நடுங்க வேண்டிய இடம் வேறு” என்று கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியாகப் பேசிய திண்டிவனம் ராமமூர்த்தி, “கராத்தே தியாகராஜனை தோழன் என்று கூறுவதா, தொண்டன் என்று கூறுவதா அல்லது உற்ற துணைவர் என்று சொல்வதா எனத் தெரியவில்லை. அவர் காங்கிரஸுக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். காமராஜர் காலத்திலேயே காங்கிரஸை விட்டு மேயர் பதவி சென்றுவிட்டது. அதன் பிறகு காங்கிரஸ்காரர் ஒருவரை மேயராக சென்னை மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் அனைவரும் பார்த்தது தியாகராஜனைத்தான். அவரிடம் எளிதாக எந்தக் கோரிக்கையையும் முன்வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்தது” என்று பாராட்டினார்.

காங்கிரஸிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கும் கராத்தே தியாகராஜன், நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்றும், அவருக்கு ஆதரவாகவும் தொடர்ந்து ஊடகங்களில் பேசி வருகிறார். இந்தச் சூழலில் கராத்தே தியாகராஜனின் பிறந்தநாள் விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சுமார் 2,000 பேர் வரை கலந்துகொண்டிருக்கிறார்கள். விழாவில் சுமார் 5,000 பேருக்கு விருந்து பரிமாறப்பட்டது.

கராத்தே தியாகராஜனை நேற்று காலையே தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த். இதுபோலவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் முகநூலில் ரஜினியும், கராத்தே தியாகராஜனும் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share