தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் என நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தனித்தனியாகப் பேட்டியளித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக கடந்த 17ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு கமல்ஹாசனை வாழ்த்திப் பேசினர்.
விழாவில் இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், ரஜினியும் கமலும் இணைய வேண்டும் என்றும், அப்படி இணைந்தால் அது தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் நல்லது எனவும் தெரிவித்திருந்தார். மேலும், ஆண்ட பின்னர் தம்பிமார்களுக்கு வழிவிட வேண்டும் என விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியிருந்தார். சந்திரசேகர் பேசிய ரஜினி – கமல் அரசியல் இணைவு என்பது தமிழக அரசியல் அரங்கில் விவாதத்தை உண்டாக்கியது.
இருவரையும் அரசியலில் இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும், முதல்வர் வேட்பாளர் தொடர்பாகவும் நேற்றைய [டிஜிட்டல் திண்ணையில்](https://minnambalam.com/k/2019/11/19/19/rajini-kamal-who-is-chief-%20minister-candidate%3F) விரிவாகச் சொல்லியிருந்தோம்.
இந்த நிலையில் கவுரவ டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஒடிஷா சென்றிருந்த கமல்ஹாசன் நேற்று மாலை (நவம்பர் 19) சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசனிடம், ‘அரசியலில் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணையும் அதிசயம் நடக்குமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “நாங்கள் இணைவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஏனெனில் 44 ஆண்டுகளாக இணைந்துதான் இருக்கிறோம். அரசியலில் இணையும் அவசியம் வந்தால் கண்டிப்பாகச் சொல்கிறோம். தமிழகத்தின் மேம்பாட்டுக்காக இருவரும் இணைந்து பயணிக்க வேண்டிவந்தால் இணைந்தே பயணிப்போம். கொள்கைகள் குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம். அதற்கு இன்னும் நேரமிருக்கிறது” என்று பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்திடமும் இந்தக் கேள்வியைச் செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “மக்களுடைய நலனுக்காகக் கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்” என்று தெரிவித்தார்.
மக்கள் நலனுக்காக இணைவோம் என்று இருவரும் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளது அவர்கள் அரசியல் இணைவுக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.�,”