ரஃபேல்: விசாரணைக் கதவு திறந்துள்ளதாக ராகுல் கூற காரணம்?

Published On:

| By Balaji

ரஃபேல் ஊழல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்ற தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நேற்று (நவம்பர் 14) தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி கவுல் இருவரும் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். ரஃபேல் வழக்கில் விசாரணை தேவை இல்லை, எஃப்ஐஆர் பதிய வேண்டியது இல்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.

அதேசமயத்தில் , நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் கவுல் ஆகியோரின் தீர்ப்பினை நீதிபதி ஜோசப் ஏற்றுக்கொண்டாலும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார். அவரது தீர்ப்பு தற்போது அதிக கவனம் ஈர்த்துள்ளது. தீர்ப்பு வெளியான நிலையில், மக்களைத் தவறாக வழிநடத்திய வயநாடு எம்.பி. ராகுல் காந்தி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் பாயத் தொடங்கினர். ஆனால், தீர்ப்பை முழுமையாகப் படிக்காமல் பாஜக கொண்டாடுவதாகக் காங்கிரஸ் விமர்சித்தது.

அதோடு இந்த வழக்கில் தனது தீர்ப்பின் மூலம் நீதிபதி ஜோசப் விசாரணைக் கதவைத் திறந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். நீதிபதி ஜோசப் தனது தீர்ப்பில், “வழக்கில் ஆதாரம் இருக்கும்பட்சத்தில் மனுதாரர்கள் சிபிஐ அமைப்பை அணுகி, வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்ய முறையிடலாம். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, மத்திய அரசின் முன் அனுமதி பெற வகை செய்யும் ஊழல் தடுப்புச் சட்டம் 17ஏ-இன்படி, ரஃபேல் வழக்கில் மத்திய அரசிடம் அனுமதி பெற்று இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கலாம். ஆனால், மனுதாரர்கள் இந்த வழக்கில் எந்தவிதமான ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என்பதால் இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதைச் சுட்டிக்காட்டியே ராகுல் காந்தி ரஃபேல் வழக்கில் விசாரணைக் கதவு திறந்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். அதன்படி இவ்வழக்கில் காங்கிரஸ் தனது அடுத்த நடவடிக்கையைத் தொடர திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share