கோவையில் 1,621 கோடி ரூபாய் மதிப்பிலான அவிநாசி சாலை மேம்பாலம் கட்டும் பணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை அவிநாசி சாலையில் 10.10 கிலோமீட்டர் தூரத்துக்கு 1,621 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலையாக மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்கு 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிலையில் கோவை அவிநாசி மேம்பாலம் கட்டப்படுவதை எதிர்த்து, அதேபகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில், ”குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த அவிநாசி சாலையில், எந்த சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முறையாகப் பெறப்படவில்லை. அதனால், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, மேம்பால கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று (மார்ச் 17) நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய அனுமதியின்றி நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர், நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ள கட்டுமான நிறுவனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
**வினிதா**
�,