�பிப்ரவரியிலேயே…. சாத்தான் குளம் போலீஸை தப்பவிட்ட முதல்வர் தனிப்பிரிவு!

Published On:

| By Balaji

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தந்தை, மகன் இருவரையும் போலீசார் விடிய விடிய தாக்கியதாகவும் இதனால் ஏற்பட்ட ரத்தக்கறை மேஜையிலும், லத்தியிலும் இருந்த அதிர்ச்சித் தகவலும் வெளியானது. இதில் குற்றம்சாட்டப்படும் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் சாத்தான்குளம் போலீசார் குறித்து பிப்ரவரி மாதமே முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார் சென்றது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் கிராமத்தில் பெந்தேகொஸ்தே சபை உள்ளது. இங்கு போதகராக லாசர் பர்னபாஸ் என்பவர் இருந்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி தேவாலயம் சார்பில் போதகர் உள்ளிட்ட 9 பேர் புளியங்குளம் பகுதியில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து ஜெபக்கூட்டம் நடத்தியுள்ளனர். இவர்கள் மீது கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி இந்து அமைப்புகள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, மதபோதகர் மற்றும் குழுவினரை சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். தகவலறிந்து சமாதானம் பேச அங்கு விரைந்த கருங்கடல் ஊராட்சி மன்றத் தலைவர் நல்லத்தம்பி, போதகர் லாசர் பர்னபாஸ் உள்பட அனைவரையும் போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இருவரையும் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய கிறிஸ்தவ கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜெபஸ்டின் தலைமையிலான நிர்வாகிகள் அப்போதே டிஐஜியிடம் மனு அளித்துள்ளனர். மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரனுக்கு லாசர் பர்னபாஸ் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், இதுகுறித்து கலெக்டர், டிஐஜியிடம் விளக்கம் கேட்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

எனினும் இதனை அப்படியே விட்டுவிடாத லாசர் பர்னபாஸ் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தார். மனுவில், “மதவாதிகளின் தூண்டுதலின் பேரில் எங்கள் ஒன்பது பேரையும் சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்துச் சென்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகியோர் எந்த விசாரணையும் இல்லாமல் அவதூறாகப் பேசி லத்தியாலும், கைகளாலும் எங்களைத் தாக்கினர். டிஎஸ்பி எங்கள் பக்கம் என்றும், எங்களை யாரும் அசைக்க முடியாது என்றும் கூறினார்கள்.

அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றோம். எங்கள் மீது பொய் வழக்கு போட்டனர். இதுதொடர்பாக டிஐஜியிடமும், மாநில சிறுபான்மை நல வாரியத்திடமும் தெரியப்படுத்தினோம். தாங்கள் தக்க நடவடிக்கையும் பாதுகாப்பும் கொடுக்க வேண்டுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

இதுபோலவே சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்குதலுக்கு ஆளாகி மகேந்திரன் என்பவருக்கு பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. தூத்துக்குடி ஜி.ஹெச்.சில் சிகிச்சை பெற்றும் சில நாட்களிலேயே தலையில் ரத்தம் உறைந்து இறந்துவிட்டார். இதைக் குறிப்பிட்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதிதான் பேய்க்குளம் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் டிஜிபிக்கு புகார் அனுப்பப்பட்டிருக்கிறது.

அதில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷை மாற்ற வேண்டும் என்றும், துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் [புகார் அளித்திருக்கிறார்கள்](https://minnambalam.com/public/2020/06/29/66/sathankulam-jayaraj-fennix-torture). இந்தப் புகார் அனுப்பியது 17 ஆம் தேதி. இதற்கு ஒரு நாள் இடைவெளி விட்டுதான் காவல் துறை தாக்குதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மீது பிப்ரவரி மாதமே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவங்கள் எதுவுமே நடைபெற்றிருக்காது. எனினும், இவர்களுக்கு மாவட்ட காவல் துறை அதிகாரிகளிடம் ஆதரவு இருந்ததால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவு தற்போது இரண்டு அப்பாவி உயிர்கள் பறிபோய்விட்டது என்கிறார்கள் சாத்தான்குளம் பகுதியினர்.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share