சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவதில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தேசிய மின்னணு சுங்கவரி வசூல் திட்டமான ஃபாஸ்டேக் எனப்படும் தானியங்கி சுங்கவரி அட்டையை அனைத்து வாகனங்களிலும் பயன்படுத்த வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக் முறையில் தான் கட்டணம் செலுத்த வேண்டும் இல்லையெனில் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் வாகன ஓட்டிகளின் கோரிக்கைகளை ஏற்று டிசம்பர் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய போக்குவரத்துத் துறை அறிவித்தது. பின்னர் இந்த காலக்கெடுவானது ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் முறைக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் ஃபாஸ்டேக் கட்டண முறைக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கபிலன் மனோகரன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 20) தலைமை நீதிபதி ஏ பி சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது
அப்போது ஃபாஸ்டேக் கார்டை ஒட்டி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு, நம்பிக்கையான பணப் பரிமாற்றம் தொடர்பாக குறும்செய்தி மூலம் ஓடிபியோ, ரகசிய குறியீட்டு எண்ணோ அனுப்பிய பின்னர்தான் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி விதிகள் மீறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஃபாஸ்டேக் கட்டண முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர் இதுதொடர்பாக உரிய விளக்கங்களுடன் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
�,