மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக் கொடுக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருகிற 10, 11 ஆம் தேதிகளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் உள்ளிட்ட 12 கோயில்களில் மகா சிவராத்திரியின்போது சிவாலய ஓட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். பக்தர்கள் 112 கி.மீ தூரத்திற்கு ஓடி அப்பகுதியில் உள்ள 12 கோயில்களிலும் வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. பக்தர்கள் நடந்து செல்லும் பாதை மோசமாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், இந்து அறநிலையத் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு விசாரித்தது. அப்போது, அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் தேவையான அடிப்படை வசதிகளையும், கொரோனா காலம் என்பதால் மருத்துவ வசதிகளையும், பக்தர்கள் ஓடுவதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் வசதியாக சாலை வசதிகளையும் செய்து தர கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
**வினிதா**
�,