டிஜிட்டல் திண்ணை: தேர்தல் நிதி – ஸ்டாலினை வளைக்கும் டெல்லி!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொகேஷன் டெல்லி காட்டியது.

“நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளுக்கு திமுக சார்பில் தேர்தல் நிதி கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக, கணக்கு வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறது என்று சில நாட்கள் முன்பு தேர்தல் ஆணைய ஆவணங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்தன.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தேர்தல் முடிந்ததும் தங்கள் செலவுக் கணக்கைத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் திமுக தனது தேர்தல் செலவு குறித்த பிரமாணப் பத்திரத்தைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது. அதில்தான் கூட்டணிக் கட்சிகளுக்கான செலவு விவரங்கள் உள்ளிட்ட பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 15 கோடி ரூபாய் அளித்த திமுக, இன்னொரு கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 கோடி ரூபாய் அளித்திருக்கிறது.

தமிழக அளவில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக 10 கோடி ரூபாய் அளித்திருக்கும் நிலையில், அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கட்சி தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில் 7.2 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இந்தத் தொகை புனையப்பட்ட தொகை என்றும் தாங்கள் வசூலிக்கும் தேர்தல் நிதிக்குக் கணக்கு இருக்கிறது என்றும் அவை முறையாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தது.

இந்த விவகாரத்தின் தீவிர தன்மையை உணர்ந்துதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழுவே அறிக்கை வெளியிட்டது.

ஆனால், திமுக தரப்பில் இதுபற்றி அதிகாரபூர்வமான ஊடக வெளியீடுகள் எதுவுமில்லை. இதைக் குறிப்பிட்டு அதிமுக, தேமுதிக போன்ற எதிர்க்கட்சிகள் இதில் விசாரணை வேண்டுமென்று கேட்க ஆரம்பித்தன. பிரேமலதா என்ன வருமான வரி அதிகாரியா என்று திமுக தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினிடம் இந்தத் தேர்தல் நிதி விவகாரம் பற்றிக் கேட்கப்பட்டபோது, இதுபற்றி உங்களுக்குப் பதில் சொல்ல அவசியமில்லை என்று பத்திரிகையாளர்களையும் பிரேமலதாவையும் சாடினார்.

அதேநேரம் திமுகவின் தலைமை அலுவலகத்தில் இது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் பாஜக இதுவரை ஒரு மௌனப் பார்வையாளராகவே இருந்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும் பல்வேறு புகார்களை தயாரித்துவைத்திருக்கும் பாஜக, அது சம்பந்தமாக மேல் நடவடிக்கை எடுத்தால் பழிவாங்கும் நோக்கில், அரசியல் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக விமர்சனங்கள் வரும் என்று கருதுகிறது. அதேநேரம், தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்திருக்கும் இந்தக் கணக்கு வழக்கு அறிக்கை மீது விசாரணை நடத்தினால் திமுகவுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடும் பல விஷயங்கள் அதில் வெளிவரும் என்று பாஜகவின் டெல்லி தலைமைக்குத் தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையடுத்து பாஜக சார்பில் இல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக ஆதரவு எம்.பி.யாக தற்போது செயல்பட்டுவரும் சசிகலா புஷ்பா மூலம் விவகாரத்தைக் கையில் எடுப்பது என முடிவெடுத்துள்ளது மத்திய அரசு. விரைவில் தேர்தல் ஆணையத்திடம் உள்துறை அமைச்சகத்திடம் இதுபற்றி சசிகலா புஷ்பா புகார் அளிப்பார் என்றும் அதன்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்திற்கும் அவர் செல்வார் என்றும் டெல்லி வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

தேர்தல் நிதி, அதுவும் குறிப்பாக மக்களவைத் தேர்தலுக்கான நிதி என்பதில் பல்வேறு கட்சிகளும் நீக்குபோக்காகவும் நெளிவு சுளிவாகவும்தான் நடந்து கொள்கின்றன என்றாலும் கொமதேக என்ற நாமக்கல் தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட ஒரு சிறிய கட்சிக்குத் தேர்தல் நிதியாக 15 கோடி ரூபாய் திமுக சார்பில் அளிக்க வேண்டிய அவசியமென்ன… அதுவும் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி வேட்பாளர் போட்டியிடுகிற நிலையில் அக்கட்சிக்கென தனியாக தேர்தல் நிதி அளிப்பதற்கு என்ன தேவை உள்ளது என்பது போன்ற விவரங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற தொகை பற்றியும் அந்த மனுவில் சசிகலா புஷ்பா விரிவாக கேள்வி எழுப்ப இருக்கிறார்.

ஏற்கனவே வைகோ எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என்று ராஜ்யசபா சபாநாயகரான துணை குடியரசுத் தலைவரிடம் முறையிட்டவர்தான் இந்த சசிகலா புஷ்பா. இப்போது ஸ்டாலினுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை

ஓர் ஆயுதமாக கையில் எடுக்க, டெல்லியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன தேர்தல் ஆணையத்தில் திமுக அளித்திருக்கும் அறிக்கையை முழுமையாகப் படித்த பிறகு இந்த விஷயத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; அது ஸ்டாலினுக்குப் பெரிய தலைவலியாக இருக்கும் என்கிறார்கள் டெல்லியில்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆப் லைன் போனது வாட்ஸ் அப்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share