மகாராஷ்டிராவில் புனேவில் தினக்கூலி வேலை செய்து வரும் சந்தோஷ், தன் மனைவியை மெடிகேர் என்ற மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளார். கொரோனாவால் வேலையை இழந்த சந்தோஷ், மனைவியின் பிரசவத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு மருத்துவமனைக்கு வருகிறார். பிரசவம் சிஸேரியன் என்பதால் ஃபீஸ் எவ்வளவு ஆகுமோ என்ற கவலையில் சந்தோஷ் தன் இஷ்ட தெய்வத்திடம் வேண்டி கொண்டிருந்தார்.
அப்போது பிரசவ அறையிலிருந்து வெளியே வந்த டாக்டரிடம், ”டாக்டர் என்ன குழந்தை” என்று சந்தோஷ் கேட்கிறார்.
”உங்களுக்கு தேவதை பிறந்திருக்கு” என்கிறார் டாக்டர்.
”ஃபீஸ் எவ்வளவு சார்” என்கிறார் சந்தோஷ்.
“தேவதைகள் பிறந்தால் நான் ஃபீஸ் வாங்குவதில்லை” என்று டாக்டர் கூறுகிறார்.
உடனே சந்தோஷூக்கு என்ன செய்வதென்று தெரியாமல், டாக்டரின் கையை பிடித்து மனமாற நன்றி கூறுகிறார்.
ஆம், புனேவில் உள்ள மெடிகேர் என்ற மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் கணேஷ் ராக் என்பவர் 2012ஆம் ஆண்டு முதல் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால், எந்தவித கட்டணமும் வாங்காமல் பிரசவம் பார்த்து வருகிறார்.
இதுகுறித்து டாக்டர் கணேஷ் ராக் கூறுகையில்,” என்னுடன் அக்கா, தங்கை பிறக்கவில்லை. எனக்கு தம்பிகள் மட்டுமே உண்டு. அதனால், பெண் பிள்ளைகளி அருமை என்னவென்று தெரியும். என் வீட்டின் அக்கம் பக்கத்தினர் பெண் குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் வளர்ப்பார்கள். அவர்களை ஒரு சுமையாகவே கருதி வளர்ப்பதை நானே பார்த்திருக்கிறேன்.
மருத்துவமனை ஆரம்ப காலத்தில் பிரசவத்தின்போது பெண் குழந்தை பிறந்தால், உறவினர்கள் அனைவரும் தாயை அவமானபடுத்தி பேசுவார்கள். ஏதோ துக்க நிகழ்ச்சி நடந்ததுபோன்று நடந்து கொள்வார்கள். ஏன் சில தாய்மார்கள் கூட புதிதாக பிறந்த பெண் குழந்தைகளை பார்க்க மாட்டார்கள், தொடமாட்டார்கள். இதனின் உச்சகட்டமாக, குழந்தையை நாங்கள்தான் மாற்றி வைத்துவிட்டோம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுவார்கள். அதுவே ஆண் குழந்தையாக இருந்தால் அனைவரின் முகத்திலும் அப்படியொரு சந்தோஷமும், மகிழ்ச்சியும் இருக்கும்.
புனே போன்ற வளர்ந்த நகரங்களிலேயே இதெல்லாம் நடக்கிறது என்றால், கிராமங்களின் அவலநிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதனால்தான் பெண் சிசுகொலை மற்றும் பெண் பாகுபாட்டை தடுக்க எதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். அதன்பிறகுதான், இந்த மருத்துவமனையில் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் கட்டணம் கிடையாது என்ற சலுகையை அறிவித்தேன். தற்போதுவரை 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துள்ளேன். இதற்கான செலவுகளை நான் ஒருபோதும் கணக்கு பார்த்தில்லை” என்று கூறினார்.
அந்த பகுதியில் உள்ள மற்ற டாக்டர்களும் இவரைப் பார்த்து பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் கட்டணம் வசூலிக்காமல் பிரசவம் பார்த்து வருகின்றனர்.
**-வினிதா**
�,