கொரோனா நோயாளிகள் 3 நாளில் டிஸ்சார்ஜ்? தென்காசி ஷாக்!

Published On:

| By Balaji

கொரோனா சோதனை மேற்கொண்டு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் கூட, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்திய நிலையில்… தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூன்றே நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தென்காசி திமுக மாவட்டப் பொறுப்பாளர் சொ. சிவபத்மநாதன் தென்காசி கலெக்டருக்கு இன்று (ஜூலை 13) அனுப்பிய புகாரில் பல அதிர்ச்சித் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

“ரத்த பரிசோதனை எடுத்து அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்த உடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு கொரனா தொற்று இருக்கிறது என்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தொடர்ந்து 14 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கழகம் அறிவித்துள்ளது.

ஆனால் தென்காசி மாவட்டத்தில் கொரனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் 3 நாட்களிலே மருத்துவமனையிலிருந்து உங்களுக்கு குணமாகிவிட்டது என்று சொல்லி பல்வேறு பேப்பர்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டு அவர்களை டிஸ்சார்ஜ் செய்வதாக தொடர்ந்து புகார் வந்துகொண்டிருக்கிறது .இது பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் செய்தியாகவும் வந்திருக்கிறது.

உதாரணத்திற்கு தென்காசி நகராட்சியில் பணிபுரிகிற துரைராஜ் என்பவர் கடந்த ஜூலை 9ஆம் தேதி அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால் அவர் கடந்த ஜூலை 12ஆம் தேதியே மருத்துவமனையிலிருந்து குணமாகிவிட்டது என்று காரணம் சொல்லி விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் எந்த அடிப்படையில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று விசாரிக்கையில் அவர் சொல்லுகிற காரணங்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

என்னவென்றால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவ அறிக்கை வந்தவுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் நடைபெறவில்லை என்றும் மூன்று வேளைக்கு சாப்பாடு மட்டும் கொடுத்தார்கள் என்றும் கூறியுள்ளார். காலையில் ஒரு நோயாளிக்கு நான்கு இட்லி மதியம் ஏதாவது ஒரு சாதம் அதேபோன்று இரவில் நான்கு இட்லி மட்டுமே கொடுத்தார்கள் என்றும் இது எல்லா நோயாளிகளுக்கும் போதுமான உணவாக இல்லை என்றும், மேலும் கொடுக்கிற உணவு சுகாதாரமாகவும் சுவையானதாகவும் இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதைவிட… தன்னை மூன்று நாட்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள், ஆனால் டிஸ்சார்ஜ் செய்கிற பொழுது எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யவில்லை என்றும், பல்வேறு பேப்பர்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தார்கள் என்றும் துரைராஜ் கூறியுள்ளார். ‘14 நாட்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்று அரசு ஏற்கனவே பத்திரிக்கை மூலமாக அறிவித்த செய்தியை தெரிந்துள்ளதால் நான் தற்போது தனித்து இருக்கிறேன்’ என்று துரைராஜ் சொல்லியுள்ளார். எதற்காக நோயாளிகளிடம் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பொழுது கையெழுத்து பெறுகிறார்கள் என்பதில் மர்மம் இருக்கிறது ஒருவேளை அதே நோயாளி 14 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்கள் அவர்களுக்கு உணவு மருந்து வழங்கப்பட்டது என்று கணக்கு காட்டி மோசடி நடப்பதாக நோயாளிகள் கருதுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ள சிவ. பத்மநாதன்,

“எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த விஷயத்தில் தலையிட்டு நோயாளிகள் முழுமையாக குணம் அடைந்த பின்னர் அவர்களுக்கு மீண்டும் ரத்த பரிசோதனை செய்து அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்கள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று தென்காசி மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக பாத்ரூமிற்கு தண்ணீர் சரியாக வரவில்லை, பாத்ரூம் சரி செய்யப்படவில்லை, சுத்தமில்லாமலும், சுகாதாரம் இல்லாமலும் பாத்ரூம் இருக்கிறது எனவே அதனை சரி செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார் திமுக தென்காசி மாவட்டப் பொறுப்பாளர் சிவ. பத்மநாதன்.

தென்காசி மருத்துவமனை மீதான புகார்களால் தென் மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்குமோ என்ற அச்ச உணர்வு மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share