கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எங்கெங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்று பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவனுக்கு (74) கடந்த ஜூன் 10ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் அவர் ஈக்காட்டுதாங்கல் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு இடமில்லாததால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஆதிகேசவன் மருத்துவமனையிலிருந்து மாயமாகி விட்டார் .
இதுகுறித்து அவரது மகன் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது மற்றொரு மகன் துளசிதாஸ் தனது தந்தையை மீட்டுத்தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிக் கவனம் செலுத்திப் பாதுகாக்க வேண்டியது அரசு அதிகாரிகளின் முக்கிய கடமை என்று தெரிவித்து, மாயமான ஆதிகேசவனை ஒருவாரத்தில் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
அதோடு, ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றதால், வழக்கை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து பூக்கடை காவல் நிலையத்திற்கு மாற்றியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த ஜூலை 14 ஆம் தேதி மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 24) நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் காய்ச்சல் முகாமிலிருந்து தொற்றால் பாதிக்கப்படுபவர்களைக் கண்டறிவது முதல் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்ப்பதுடன் தங்களது பணி முடிந்து விடுவதாகவும் அதற்குப் பின்னர் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில்தான் நோயாளிகள் கவனிக்கப் படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எங்கெங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள், எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்று பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு மாநகராட்சி சார்பில், தங்களுக்கும் சுகாதார துறைக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இருப்பதாகத் தெரிவித்ததுடன், பராமரிக்கப்படும் பதிவேடுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாயமான நபரை தேடுவது தொடர்பாக விளக்கம் அளிக்க ஒருவாரம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
**-கவிபிரியா**�,