திறன் மேம்பாட்டுக்குத் தனி பல்கலைக்கழகம்: ஜெகன்மோகன்

Published On:

| By Balaji

ஆந்திர முதல்வராகப் பதவியேற்றதில் இருந்தே அதிரடியாகச் செயல்திட்டங்களை அறிவித்துவரும் ஜெகன்மோகன் ரெட்டி, திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று (அக்டோபர் 27) முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாநிலத்தின் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரு கல்லூரி உருவாக்கப்படும். அவை அனைத்தும் புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும்.

இந்தப் பல்கலைக்கழகம் மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பயன்படும். ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் பிற படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். அனைத்து அரசுத் துறைகளும் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும்.

இதில் ஒவ்வொரு மாணவருக்கும் ஓராண்டுக்குத் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும். தேவைப்பட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்கும் பயிற்சி நீட்டிக்கப்படும். பல்கலைக்கழக செயல்பாட்டுக்கென ஓர் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார். திறன் மேம்பாட்டு வகுப்புகளை அவர் கவனித்துக் கொள்வார்.

மாணவர்களின் திறன்களை வளர்க்கவும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் தேவையான நிதியை, நிதித்துறை வழங்கும். ஏற்கெனவே உள்ள வேலைவாய்ப்பு அலுவலகமும் டிஜிட்டல் மயமாக்கப்படும். அதற்கென தனிச் செயலி உருவாக்கப்படும்.இதற்காக ஆந்திரா முழுவதும் 25 கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, தனி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகே, ஜெகன்மோகன் ரெட்டி இதை அறிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share