ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல் அபுபகர் அல் பாக்தாதி அக்டோபர் 26 ஆம் தேதி இரவு சிரியாவில் அமெரிக்கப் படைகளின் தாக்குதலின் போது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்து மரணம் அடைந்தார்.
இந்தத் தாக்குதலின் போது அமெரிக்க டெல்டா படைகளின் ஆபரேஷனுக்கு முக்கிய பங்கு வகித்த ராணுவ நாயின் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டரில் நேற்று (அக்டோபர் 28) வெளியிட்டிருக்கிறார்.
“ஐஎஸ் ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதியை பிடிப்பதிலும், கொல்வதிலும் மிகப்பெரிய பங்கு வகித்த எங்கள் அழகான நாயின் புகைப்படத்தை வெளியிடுகிறோம். நாயின் பெயரை வெளியிட முடியாது” என்று குறிப்பிட்டு கம்பீரமாக ராணுவப் பட்டைகளை அணிந்திருக்கும் நாயின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் டிரம்ப்.
இதிலிப் மாகாணத்தின் குக்கிராமமான பாதிர்ஷாவில் சுரங்கத்துக்கு மேல் கட்டப்பட்ட வீட்டில் பாக்தாதி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அமெரிக்க டெல்டா படை அந்த வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டுக்கு அடியில் சுரங்கம் இருக்கிறது, அதை விட்டால் பாக்தாதி தப்பித்து ஓட வேறு வழியில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட ராணுவம், வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது. எதிர்பார்த்ததைப் போலவே பாக்தாதி சுரங்கத்துக்குள் ஓடி ஒளிந்தார்.
பாக்தாதி தற்கொலை உடை அணிந்திருப்பதால் அவனைப் பிடிக்க நாய்களை சுரங்கத்துக்குள் ஏவிவிட்டனர் ராணுவத்தினர். ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்களின் மோப்ப சக்தி மற்றும் வீரியமான பாய்ச்சலின் காரணமாக பாக்தாதி சுரங்கப் பாதையின் முடிவுக்கு ஓடினார். அதற்கு மேல் தப்பித்துச் செல்ல வழியில்லாததால்தான், தற்கொலை அங்கியை இயக்கினார்.
இந்த தாக்குதலை நடத்திய இராணுவ டெல்டா படையின் ஒரு பகுதியான இந்த நாய் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தது. இப்போது அந்த நாய் சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில்தான் இந்த நாயின் புகைப்படத்தை தன் ட்விட்டரில் பகிர்ந்தார் டிரம்ப். நாயின் பெயரையோ, இனத்தையோ ராணுவ அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டதால் டிரம்ப் அதை வெளியிடவில்லை என்று தெரிகிறது.
அதேநேரம் பாக்தாதியை பாய்ந்து பிடித்த நாய் பற்றி அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துகளையும், கணிப்புகளையும் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள்.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் ராணுவ செய்தியாளரான டான் லெமோதே தனது ட்விட்டரில், “ராணுவ சோர்ஸுகள் அது பெண் நாயல்ல ஆண் நாய் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**நான்குகால் வீரர்கள்**
இதுபற்றி அமெரிக்க கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இப்போது அமெரிக்க போர் நாய்களின் நலனுக்கான தொண்டு நிறுவனத்தை நடத்திவருபவருமான ரான் ஏயெல்லோ, “ராணுவத்தில் குறிப்பாக அமெரிக்க ராணுவத்தில் நாய்கள் சிறப்பு நடவடிக்கை படைகளால் மேற்கொள்ளப்படும் முக்கியமான மற்றும் ஆபத்தான பணிகளின் ஒரு பகுதியாக எப்போதுமே விளங்கி வருகின்றன.
ஆபத்தான சிறப்பு ஆபரேஷன்களின் போது இந்த நான்கு கால் வீரர்களான நாய்கள்தான் பாதுகாப்புக்கான முதல் வரிசையில் இருக்கிறார்கள். ராணுவத்தில் பொதுவாகவே அவற்றை நாய்கள் என்று அழைக்கமாட்டார்கள். நான்கு கால் வீரர்கள் என்றுதான் அழைப்பார்கள்.
ராணுவ வீரர்களின் முன்னால் இருக்கும் எந்த ஒரு ஆபத்தையும் கண்டறிவதே நாய்களின் வேலை. மேலும் இதுபோன்ற போர் நாய்கள் வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கின்றன. வீரர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரிதான் அந்த ஆபரேஷனின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன” என்கிறார்.
அமெரிக்க ராணுவம் பொதுவாக ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் பெல்ஜிய மாலினோயிஸ் வகை நாய்களையே அதிகமாக பயன்படுத்தி வருகிறது. பயங்கரவாதிகளை குறிவைக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க ஆயுதப்படைகள் நாய்களை நம்பியிருப்பது இது முதல் முறை அல்ல. 2011 ஆம் ஆண்டில், கெய்ரோ என்ற நாய் ஒசாமா பின்லேடனின் மரணத்திற்கு வழிவகுத்த சோதனையில் பங்கேற்றது. கடற்படை உள்ளே சென்றபோது கெய்ரோ என்ற நாய்தான் பின்லேடன் இருந்த காம்பவுண்ட்டை சுற்றிப் பாதுகாத்தது. இந்த இரு ஆபரேஷன்களிலுமே ஈடுபடுத்தப்பட்டது பெல்ஜிய மாலினோய்ஸ் வகை நாய்கள்தான் என்றும் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.
�,”